இந்தி திரைக்கதையாசிரியரும், பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர், நாவலாசிரியர் மிருதுளா கார்க், வங்க கவிஞர் சுபோத் சர்கார், தமிழ் நாவலாசிரியர் ஜோ.டி. குரூஸ் உள்ளிட்டோருக்கு 2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் ‘கொற்கை’ புதினத்தை எழுதியமைக்காக ஜோ.டி. குரூஸுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து 2011 டிசம்பர் வரை வெளியான புத்தகங்கள் பரிந்துரைக்கு ஏற்கப்பட்டிருந்தன. 22 இந்திய மொழிகளின் பிரதி நிதிகள் அடங்கிய தேர்வுக்குழுவும் அகாடமி யின் செயற்குழுவும் விருதுக்கான படைப்புகளைத் தேர்வு செய்தது.
அகாடமியின் தலைவர் விஸ்வ நாத் பிரசாத் திவாரி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள், நூலாசிரியர்களின் பட்டியலை புதன்கிழமை வெளியிட்டார்.
குஜராத்தி, அஸ்ஸாமிக்கு இல்லை
சாகித்ய அகாடமி செயலர் கே.ஸ்ரீநிவாச ராவ் கூறுகையில், “தவிர்க்க முடியாத காரணங்களால் அஸ்ஸாமி, குஜராத்தி மொழிப் படைப்புகளுக்கு விருது அறிவிக்கப் படடவில்லை. மிக விரைவில் அந்த விருதுகள் அறிவிக்கப்படும்” என்றார்.
ஜாவேத் அக்தர்
ஜாவேத் அக்தருக்கு 55 உருதுக் கவிதைகளைக் கொண்ட ‘லாவா’ நூலுக்கு இவ்விருது வழங்கப்படு கிறது.
சிறுகதை
சிறுகதைப் பிரிவில், தெம்சுலா ஆவோவின் ‘என் தலைக்குச் சரக்கொன்றைப் பூ’ (லபுமம் ஃபார் மை ஹெட்- ஆங்கிலம்), மோஹி உத்தின் ரேஷி எழுதிய ‘அய்னா ஆதாஷ்’ (காஷ்மீரி) ஆகிய நூல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கட்டுரை
கன்னட எழுத்தாளரான சி.என். ராமச்சந்திரனின் ‘ஆக்ஞானா-வியாக்ஞானா’, கொங்கணி எழுத்தாளரான துக்காராம் ராமா சேத்தின் ‘மன்மோதயம்’, மராத்தி எழுத்தாளரான சதீஷ் கலேஷ்கரின் ‘வச்சனார்யாச்சி ரோஜானிஷீ’, தெலுங்கு எழுத்தாளரான கத்யானி வித்மஹேவின் ‘சாகித்ய ஆகாசம்லோ சாகம்’ ஆகிய நூல்களுக்கு கட்டுரைப் பிரிவில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணக் கட்டுரை
பயணக்கட்டுரைப் பிரிவில் மணிப்புரி எழுத்தாளரான மகோன்மணி மோங்ஸபாவின் ‘சிங்லோன் அமாதகி அமதா’, நேபாள எழுத்தாளரான மன் பகதூர் பிரதானின் ‘மங்கா லஹர் ரா ரஹராரு’ ஆகிய நூல்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கவிதை
வங்க கவிஞர் சுபோத் சர்காரின் ‘த்வைபயான் ஹ்ரதெர் தாரே’, போடோ மொழி கவிஞர் அனில் போரோவின் ‘தெல்பினி ஒந்தாய் தாய் அர்வ் குபன் குபன் கொந்தாய்’, டோக்ரி மொழி கவிஞர் சீதாராம் சபோலியாவின் ‘தோஹா சத்சாய்’, ராஜஸ்தானி கவிஞர் அம்பிகா தத்தின் ‘அந்த்யோய் நஹி தின் ஹால்’, சம்ஸ்கிருத கவிஞர் ராதாகாந்த் தாகுரின் ‘சலதுரவாணி’, சந்தாலி மொழிக் கவிஞர் ஹெம்ப்ராமின் ‘சந்தா பொங்கா’, சிந்தி கவிஞர் தாரா சந்தானியின் ‘மன்ஷ்-நாகன்’ ஆகிய நூல்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதினம்
புதினங்கள் பிரிவில் மிருதுளா கார்க்கின் ‘மில்ஜுல் மேன்’ (இந்தி), ஜோ டி குரூஸின் ‘கொற்கை’ (தமிழ்), மன்மோகனின் ‘நிர்வாணம்’ (பஞ்சாபி) நூல்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மைதிலி மொழியில் எழுதப்பட்ட சுரேஷ்வர் ஜாவின் ‘சங்கார்ஷ் ஆ சேஹாந்தா’ என்ற நினைவுக் குறிப்பு நூலுக்கும், மலையாளத்தில் எம்.என். பலூர் எழுதிய ‘கதையில்லாதவன்டே கதா’ என்ற சுயசரிதத்திற்கும், ஒடியா மொழியில் பிஜோய் மிஸ்ரா எழுதிய ‘பாணபிரசாதா’ என்ற நாடகத்திற்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச் 11 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.