தமிழகம்

வந்தவாசியில் போலி ஆணை மூலம் ஆசிரியர் பணியில் சேர முயன்றவர் கைது

செய்திப்பிரிவு

வந்தவாசியில் போலி ஆணை மூலம் ஆசிரியர் பணியில் சேர முயன்ற பெண் கைது செய்யப்பட் டார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, மாறுதல் ஆணையுடன் பெண் ஒருவர் நேற்று முன்தினம் சென்றுள்ளார். தலைமை ஆசிரியர் பானுமதியிடம், தி.மலை முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயகுமார் கையொப்பமிட்ட பணி மாறுதல் ஆணையை வழங்கினார்.

அதில், சென்னை ஈக்காட்டுதாங் கலைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர், வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள் ளிக்கு பணி மாறுதல் செய்யப் பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந் தது.

இதனால் சந்தேகம் அடைந்த தலைமை ஆசிரியர் உடனடியாக முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயகுமாரின் கவனத்துக்கு கொண்டுசென்றார். ஆய்வு செய்த தில், போலி பணி மாறுதல் ஆணை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் பானுமதி புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் மகேஸ்வரியை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும் போது, “வந்தவாசியை அடுத்த இரும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. கணவரை பிரிந்து சென்னையில் வசித்து வருகிறார். பட்டதாரியான அவர், தனது தம்பி ராஜேகேரன் மூலம் ரூ.3.5 லட்சம் கொடுத்து பணி நியமன ஆணையை பெற்றுள்ளார்.

ராஜசேகரனை கைது செய்து விசாரித்தபோது, திருவண்ணா மலையை அடுத்த மருத்துவாம்பாடி கிராமத்தில் வசிக்கும் சக்கரபாணி என்பவர் போலி பணி நியமன ஆணையை கொடுத்ததாக தெரிவித்தார். சக்கரபாணி தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகிறோம்” என்றனர்.

இதுகுறித்து தி.மலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெய குமார் கூறும்போது, “போலி பணி நியமன ஆணை மூலம் பணியில் சேர முயன்ற மகேஸ்வரி சிக்கியுள்ளார். இதேபோல், பெரணமல்லூரை அடுத்த ஆவணியாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்த முத்துலட்சுமியின் மீது கடந்த ஜனவரி மாதம் புகார் வந்தது. விசாரணையில் அவர், போலி பணி மாறுதல் ஆணை மூலம் பணியில் சேர்ந்தது உறுதியானது. அவர், மீது பெரணமல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வடமணப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் (வரலாறு) புனிதவதி மற்றும் விண்ணமங்கலம் அடுத்த மேல்மட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) விஜயகுமார் ஆகி யோர் போலி பணி மாறுதல் ஆணை மூலம் பணியில் சேர்ந்தது ஓரிரு நாட்களுக்கு முன்பு உறுதியானது. அவர்கள் மீதும் விரைவில் போலீஸார் வழக்கு பதிவு செய்வார்கள். அவர்கள், 3 பேரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

SCROLL FOR NEXT