முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவை விடுதலை செய்யக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக கவுன்சிலர்கள் 170 பேர் உண்ணாவிரதம் இருந்தனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 8-வது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாள ரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பைக் கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்யக்கோரியும் அதிமுகவினர் கடந்த ஒரு வாரமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கண்டன போஸ்டர், கருப்பு கொடி ஏற்றுவது, மொட்டை அடித்தல், கருப்புச் சட்டையுடன் உண்ணாவிரதம், மனித சங்கிலி என பலவித போராட்டங்கள் நடத்தப்பட்டது வருகின்றன. மேலும், கோயில்களில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்படுகின்றன.
சென்னை மெரினா கடற்கரை யில் உள்ள எம்ஜிஆர் நினை விடத்தில் நேற்று முன்தினம் அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணா விரதம் இருந்தனர். இதில், தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக் களும் பங்கேற்றனர். அதே இடத்தில், சென்னை மேயர் சைதை துரைசாமி தலைமையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் 170 பேர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். அவர்கள் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து கையில் ஜெயலலிதா படத்துடன் அமர்ந் திருந்தனர்.
எம்எல்ஏக்கள் மனித சங்கிலி
அதிமுக எம்எல்ஏக்கள் மெரினா கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத் தப்பட்டது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தி ருந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். உண்ணாவிர தத்தை தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் எஸ்.ராமன் தொடங்கிவைத்தார். உண்ணா விரத பந்தலில் பாராயணம், ஜெபம், கூட்டுப் பிராத்தனை நடத்தப்பட்டன.
இதில், தஞ்சாவூர் மேயர் சாவித்திரி கோபால், அதிமுக பேச்சாளர் சரஸ்வதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
தமிழ்நாடு விஸ்வகர்ம சங்கங்களின் கூட்டமைப்பு சார்பிலும் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. கூட்டமைப்பின் மாநில தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம், அகில இந்திய விஸ்வகர்ம பேரவை உட்பட 9 சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ச் அணிந்து உண்ணாவிரதம் இருந்தனர்.