கோவையில் சென்சார் குப்பைத் தொட்டிகளைத் தொடர்ந்து, சென்சார் கட்டணக் கழிப்பிடங்கள் அமைக்கப்படுகின்றன. இதுபோன்ற தொழில்நுட்பங்கள் மூலம் சுகாதாரப் பணிகள் துல்லியமாக இருக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.
கோவை மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து 100 வார்டுகளிலும் சுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்த மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் கூடுதலாக கழிப்பிடங்களை அமைத்து வருகிறது. கட்டணக் கழிப்பிடங்கள் மட்டுமல்லாமல், ஒவ்வொரு வார்டுகளிலும் கூடுதலாக ‘நம்ம டாய்லெட்கள்’, மக்கள் கூடும் பொது இடங்களில் எளிதில் அகற்றக்கூடிய ‘மொபைல் டாய்லெட்கள்’ அமைக்க மாநகராட்சி ஆர்வம் காட்டி வருகிறது. குப்பை, கழிவுநீர் தேங்கும் இடங்களை ‘ஸ்வச் சர்வெக்சான்’ திட்டத்தின் மூலமும் சுகாதாரப் பாதுகாப்புக் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
அதிலும் சென்சார்கள் மூலம் இயங்கும் நவீன தொழில்நுட் பங்களை பயன்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல்முயற்சியாக குப்பைத் தொட்டிகளில் குப்பை நிரம்புவதை தெரிவிக்க சென்சார்கள் பொருத்தப் பட்டன. அவை மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
அதைத் தொடர்ந்து சென்சார் மூலம் இயங்கும் கட்டணக் கழிப்பிடத்தை நிறுவும் முயற்சியில் இறங்கியுள்ளது கோவை மாநகராட்சி. சாதாரண கழிப்பிடங்களைப் போல இல்லாமல், குறைந்த பரப்பளவில் வைக்கக்கூடிய அளவில், துருப்பிடிக்காத எஃகு தகடுகளால் இந்த மின்னணு கழிப்பிடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேற்கூரையில் இருக்கும் தண்ணீர்த் தொட்டி, கதவுகள், உட்புற வேலைப்பாடுகள் அனைத்துமே துருப்பிடிக்காத எஃகினால் செய்யப்பட்டுள்ளன. சென்சார் உதவியுடன் இயங்கும் வகையில் முழுவதும் வடிவமைக்கப் பட்டுள்ளன. கோவையில் ரேஸ்கோர்ஸிலும், காந்திபுரத்திலும் தலா ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு கழிப்பிடங்கள் அமைக்கப் பட்டு வருகின்றன.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘முழுக்க முழுக்க சென்சார் உதவியுடன் இயங்கக்கூடியது இந்த கழிப்பறை. நாணயம் செலுத்தினால் மட்டுமே கதவுகள் திறக்கும், தண்ணீர் வரும், மின்விளக்குகள் எரியும். ஒருவேளை குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் கட்டணத்தை ஏற்றுக் கொள்ளாது.
தேவைப்படும்போது, அதுவே சுத்தப்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் அதை கட்டமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். இதை செயல்படுத்த ஆட்கள் யாரும் தேவையில்லை’ என்றனர்.