சூளகிரி அருகே ஏனுசோனை கிராமத்தில் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்பதுக்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஏனுசோனை கிராமத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால நாகரிகத்தை சேர்ந்த கல்பதுக்கையினை வரலாற்று ஆர்வலரான ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ் கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: பெருங்கற்கால நாகரிக காலத்தில் தன் இனக்குழுவிலுள்ள ஒருவர் இறந்துவிட்டால் இறந்தவர் நினை வாக ஈமச்சின்னங்கள் எழுப்பும் வழக்கம் இருந்தது.
இவ்வகை ஈமச்சின்னங்கள் கல்வட்டம், கல்திட்டை, கல்பதுக்கை, குத்துக்கல் என பல வகைகளில் உள்ளது. இதில் ஏனுசோனை கிராமத்தில் காணப்படும் ஈமச்சின்னமானது கல்பதுக்கை வகையினைச் சார்ந்ததாகும். இக்கல்பதுக்கையானது சுமார் 5 அடி நீள, அகல, ஆழமுள்ள குழியின் நாற்புறமும் 6 அடி உள்ள பட்டையாக செதுக்கப்பட்ட கற்கள் நிலத்தில் பொருத்தப்பட்டுள்ளது. நிலத்தின் மேற்புறம் 1 அடி நீண்டுள்ளது. இது, பக்க கற்களை விட அதிக எடை கொண்ட 1 அடி தடிமனுள்ள மூடுகல்லினைக் கொண்டு மூடப்பட்டுள்ளது.இதனைச் சுற்றிலும் கல்வட்டமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கல்பதுக்கையின் கிழக்குபுற கற்பலகையின் மேற்புற பக்கவாட் டில் 'U' வடிவ இடுதுளை எனப்படும் துவாரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக இப்பெருங்கற்கால நாகரிகத்தில் இனக்குழு மரபில் ஒருவர் இறந்தபின்பும் அவரது ஆவியானது அவர் வாழ்ந்த இடத்தில் தங்கும் என நம்பினர். அவ்வாறு இறந்தவர் ஆவி வந்து தங்குவதற்கு ஏதுவாக இவ்வகை இடுதுளை ஏற்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த இடுதுளை முன்பாக ஆவிவழிபாடானது நடைபெற்றது. இறந்தவரை மகிழ்வித்தால் தம் சந்ததி செழிக்கும், உழவு செழிக்கும் என நம்பிக்கையுண்டு. எனவே இவ்வகை ஈமச்சின்னங்களில் படையல் வைத்து வழிபடும் மூதாதையர் வழிபாடு முறை தொன்றுதொட்டு வருகிறது என வரலாற்று ஆர்வலரும் ஆசிரியர் பயிற்றுநருமான சுரேஷ் தெரிவித்தார்.