மத்திய அரசின் உதய் திட்டம் அமலுக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையைப் போல மின் கட்டணம் உயரும் நிலை ஏற்படும் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில தலைவர் சுப்ரமணியம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
மின் ஊழியர்களுக்கு 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின் ஊதிய உயர்வினை அரசு வழங்கி இருக்க வேண்டும். இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குழு அமைத்தார். இப்போது வரை குழு அறிக்கை வரட்டும் என்ற காரணத்தைக் கூறி தாமதப்படுத்துகின்றனர். 50 சதவீத ஊதிய உயர்வை வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தினோம்.
இந்தியாவில் மிக அதிக மின் இணைப்பு கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. மின் துறையின் களப்பிரிவு, கணக்கீட்டு பிரிவில் 25 ஆயிரம் பணியிடம் காலியாக உள்ளது. களப்பிரிவு பணியாளர்கள் அதிகமாக இருந்தால்தான், தமிழகத்தில் உள்ள 2.70 கோடி இணைப்புகளில் எங்கு பிரச்சினை என்றாலும் சரி செய்ய முடியும்.
காலிப்பணியிடங்களை நிரப்பும்போது, ஏற்கெனவே பணியாற்றி வரும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
மத்திய அரசின் உதய் திட்டம் அமலாகும்போது, மின் உற்பத்தியை அரசும், விநியோகம் மற்றும் பராமரிப்பு பணியை தனியாரும் மேற்கொள்வார்கள். இதனால், பெட்ரோல், டீசல் கட்டணம் போல், மின் கட்டணமும் உயரும் நிலை ஏற்படும். எனவே உதய் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது.
தமிழகத்தில் 17 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாவதாகவும், மின் மிகை மாநிலமாக விளங்குவதாகவும் அரசு தெரிவிக்கிறது. நமது தேவை என்பது 14 ஆயிரம் மெகாவாட்தான். இதில், 3,818 மெகாவாட் மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ.7 முதல் 9 வரை கொடுத்து தனியாரிடம் இருந்து வாங்குகின்றனர். அரசு சொந்தமாக மின் உற்பத்தி செய்தால் யூனிட்டுக்கு ரூ.2.50 முதல் 3 தான் ஆகும்.
தற்போது அதாணியிடம் ஒரு யூனிட் 7.01 ரூபாய்க்கு வாங்குவதாக 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளோம். இதே அதாணி, ஒரு யூனிட் 5.45 ரூபாய்க்கு மகாராஷ்டிராவுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.
இவற்றை தவிர்த்து மின் உற்பத்தியை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்தாலே மின்வாரியம் லாபகரமாக செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.