தமிழகம்

அதிமுகவை அழிக்க நடராஜன், திவாகரனே போதும்: பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா கருத்து

செய்திப்பிரிவு

அதிமுகவை அழிக்க நடராஜன், திவாகரன் ஆகிய இருவர் போதும் என பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:

அதிமுக ஆட்சியை கலைக்க பாஜக முயற்சி செய்கிறது என்ற நடராஜனின் கூற்று உள்நோக்கம் கொண்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை அவர் முன்னே வரக்கூட தைரியம் இல்லாத நபர்கள், ஜெயலலிதாவால் அதிமுகவை விட்டு நீக்கி வைக்கப்பட்டவர்கள் இப்போது தைரியமாகப் பேசுகிறார்கள்.

அதிமுகவை சுக்குநூறாக ஆக்குவதற்கு வேறு யாரும் தேவை இல்லை. சசிகலாவின் கணவர் நடராஜன், திவாகரன் போதும். தற்போதைய அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு மறைமுகமாகக் குழி தோண்டும் வேலையை நடராஜன், திவாகரன் செய்கின்றனர். இவர்கள் இருவரும் கட்சியை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்கின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு பொதுமக்கள், மாணவர்களின் எழுச்சியை வரவேற்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமே தடை உள்ளது. மஞ்சு விரட்டுக்கு தடை இல்லை. எனவே மஞ்சு விரட்டுக்கு என கைது செய்த அனைவரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT