சென்னை உட்பட 7 மாநக ராட்சிகள், 4 நகராட்சிகளில் ரூ.3,229 கோடியில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் மேற் கொள்ளப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
நகராட்சிகள், மாநகராட்சி களின் மின் கட்டண செலவை குறைக்கும் வகையில் தெரு விளக்குகள் அனைத்தையும் எல்இடி விளக்குகளாக மாற்ற அரசு முடிவு எடுத்துள்ளது. அதன்படி, முதல்கட்டமாக 10 மாநகராட்சிகளிலும், திருப்பூர் மண்டலத்தில் 19 நகராட்சிகள், தஞ்சாவூர் மண்டலத்தில் 18 நகராட்சிகளில் உள்ள பாதரச குழல் விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சியிலும், எஞ்சியுள்ள அனைத்து நகராட்சிகளிலும் உள்ள தெரு விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற் றப்படும். இத்திட்டம் ரூ. 320 கோடியில் தனியார் மற்றும் அரசின் பங்களிப்புடன் செயல் படுத்தப்படும். இதனால் மாநகராட்சிகள், நகராட்சிகளின் மின் கட்டண செலவில் 35 சதவீதம் வரை குறையும்.
புத்துணர்வு மற்றும் நகர்ப் புற மாற்றங்களுக்காக மத்திய, மாநில அரசுகளின் பங்களிப் புடன் அட்டல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தின்கீழ் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, திருப்பூர், தஞ்சாவூர், வேலூர் ஆகிய மாநகராட்சிகள், நாகர்கோவில், ராஜபாளையம், ஆம்பூர், ஒசூர் நகராட்சிகளில் ரூ.3,229 கோடியே 23 லட்சம் செலவில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
வேளாங்கண்ணி பேரூராட்சி யில் ரூ.23 கோடியே 32 லட்சத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். திருச்சி மாநகராட்சி மற்றும் 36 நகராட்சிகளில் ரூ.116 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.
தங்கும் விடுதிகள்
அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களின் உறவினர் கள், உதவியாளர்கள் குறைந்த செலவில் தங்க குறுகிய கால தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். முதல்கட்ட மாக திருச்சி, நெல்லை, மதுரை, கடலூர், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, சேலம், விருது நகர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திண்டுக்கல், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் ரூ.11 கோடியே 62 லட்சத்தில் 23 குறுகிய கால தங்கும் விடுதிகள் அமைக் கப்படும். இந்த விடுதிகளில் மிகக் குறைந்த வாடகை நிர்ணயிக்கப்படும்.
இந்த ஆண்டு மேட்டுப் பாளையம் நகராட்சியில் ரூ.91 கோடியே 70 லட்சத்தில் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதியுதவியுடன் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத் தப்படும். இதனால் பவானி ஆற்றில் கழிவுநீர் கலக்கப் படுவது தடுக்கப்படும்.
திறந்தவெளியில் மலம் கழிப்பதை அறவே தடுக்கும் வகையில் இந்த ஆண்டு மாநகராட்சிகள், நகராட்சிகளில் ரூ.150.42 கோடியில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 352 தனி குடியிருப்பு கழிவறைகளும் ரூ.21.40 கோடியில் சமுதாய கழிவறைகளும் கட்டப்படும். அதேபோல பேரூராட்சிகளில் ரூ.108.18 கோடியில் 90,150 தனிநபர் கழிப்பிடங்களும் ரூ.17 கோடியே 3 லட்சத்தில் சமுதாய கழிப்பிடங்களும் கட்டப்படும்.
ஈரோடு மாநகராட்சியில் அமைக்கப்பட்டு வரும் இரண்டாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட நீரை மீண்டும் சுத்திகரிக்க 20 எம்எல்டி கொள்ளளவு கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவலுடன் கூடிய மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் ரூ.62.20 கோடியில் அமைக்கப்படும். இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட நீர் தொழிற்சாலை பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும். பெரம்பலூர் நகராட்சியிலும் இதுபோன்ற மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் ரூ.12.60 கோடியில் அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.