அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் தினகரனை ஆதரித்து நான் செய்ய உள்ள பிரச்சாரத்தைத் தடுக்கவே வருமான வரி சோதனை நடத்தப்பட்டது என்று சமக தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சரத்குமார் கூறியதாவது:
''இன்று காலையில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். எதற்காக சோதனை நடத்தினார்கள் என்று தெரியவில்லை. இதில் ஏதோ சதி இருக்கிறது. வருமான வரியை முறையாகத் தான் செலுத்தி வருகிறோம். அதிகாரிகள் கைப்பற்றும் அளவுக்கு என் வீட்டில் பணம் இல்லை.
தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்த பிறகே என் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது. பிரச்சாரத்தைத் தடுக்கும் நோக்கத்துடன் சோதனை நடந்தாலும், நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சோதனை நடக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த ஜி.கே.வாசன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்களா?'' என்று கேள்வி எழுப்பினார்.