பேரறிவாளனின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்த அவரது தாய் அற்புதம்மாள், மகனை விடுதலை செய்ய கோரி முதல்வர் தனிப்பிரிவில் புதன்கிழமை மனு கொடுக்க உள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது உச்ச நீதிமன்றம். அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 23 ஆண்டுகளாக பேரறிவாளனுக் காகப் போராடிவரும் தாய் அற்புதம்மாளை நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது செவ்வாய்க் கிழமை கிடைத்த தீர்ப்பு.
தீர்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில், வேலூர் சிறையில் இருக்கும் தனது மகனைக் காண சென்றிருந்தார் அற்புதம்மாள். அப்போது தொடர்பு கொண்ட ‘தி இந்து’ நிருபரிடம் அவர் கூறுகையில், ‘‘ஒவ்வொரு முறை என் மகனை சிறையில் பார்த்துவிட்டு வரும்போதும் நெருடலாக இருக்கும். இப்போது மகிழ்ச்சியாக உள்ளது. என்னை கட்டித் தழுவிக்கொண்டு என் மகன் சிரித்தான். முதல்வரை காணச் செல்லும் தகவலை அவனிடம் சொன்னேன். அவன் நம்பிக்கையுடன் இருக்கிறான்’’ என்றார் ஆனந்தக் கண்ணீருடன்.
தன் மகனை விடுதலை செய்யக் கோரி முதல்வர் தனிப்பிரிவில் அற்புதம்மாள் புதன்கிழமை மனு கொடுக்க உள்ளார். ‘‘என் மகன் விடுதலையானால்தான் முழு மகிழ்ச்சி. 23 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நிரபராதி என் மகன். வயதான காலத்தில் என் மகன் என்னுடன் இருக்க ஆசைப்படுகிறேன். அவனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மனு கொடுக்க உள்ளேன்’’ என்றார்.
திருமணம் செய்துவைக்க ஆசை:
பேரறிவாளன் விடுதலையானதும் திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகிறேன்; அவன் என்ன சொல்வான் என தெரியவில்லை என அற்புதம்மாள் தெரிவித்தார்.
வேலூர் மத்திய சிறை யில் உள்ள மூவரையும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் சந்தித்துப் பேசினர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது: 23 ஆண்டுகளாக என் மகனை ஒவ்வொரு வார மும் சந்தித்து செல்வேன். அவன் சிறையைவிட்டு வெளியே வரவேண்டும் என போராடினேன். எங்களுக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கிறோம்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பாவிகள்தான். பேரறிவாளன் எங்களைச் சந்தித்ததும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சி தெரிவித்தான். நான் பேரறிவாளனை சந்தித்து செல் லும்போதெல்லாம் மனதில் ஒரு பாரம் இருக்கும். அது இப்போது இல்லை’’ என்றார்.