நான்கு வயது வளர்ப்பு மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய வழக்கறிஞர் சுமார் ஓராண்டுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். திக்கிப் பேசிய குழந்தைக்கு அவர் மின் அதிர்வு (ஷாக் ட்ரீட்மென்ட்) கொடுத்து சித்ரவதை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெரால்டு (46). சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர். இவரது மனைவி சட்டப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்குத் திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லை. இதனால், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் மதுரையில் இருந்து மிருதுளா என்ற 4 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர்.
குழந்தை இவர்களது வீட்டுக்கு வந்த அடுத்த மாதமே உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி குழந்தை இறந்துவிட்டது.
குழந்தையின் உடலில் சந்தேகப் படும்படி காயங்கள் இருந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். ஜெரால்டிடம் விசாரித்தபோது, ‘குளியல் அறையில் குழந்தை தவறி விழுந்துவிட்டது. அதனால் உடலில் காயங்கள் ஏற்பட்டது’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தது பிரேதப் பரிசோதனையின் முதல்கட்ட அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தடயவியல் துறை ஆய்வுக்கு சிறுமியின் உடற்கூறுகள் அனுப்பப்பட்டன. ‘சிறுமியின் கழுத்து உள்ளிட்ட 6 இடங்களில் காயம் இருந்தது. இது இயற்கை மரணம் அல்ல. கொலை’ என்று அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை சில மாதங்களுக்கு முன்பே சிந்தாதிரிப்பேட்டை போலீஸாருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால், போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காமல் விசாரணையை கிடப்பில் போட்டுள்ளனர்.
இந்நிலையில், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளராக சகாதேவன் பொறுப்பேற்றார். காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி, நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் அவர் உடடினயாக விசாரிக்கத் தொடங்கினார். சிறுமி மிருதுளா வழக்கும் கிடப்பில் போடப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தினார்.
தடயவியல் ஆய்வறிக்கை அடிப்படையில், சிறுமியின் வளர்ப்புத் தந்தை ஜெரால்டை காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தார். முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் அவர் மீது சந்தேகம் அதிகரித்தது. இதையடுத்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதில், வளர்ப்பு மகள் மிருதுளாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஜெரால்டு ஒப்புக்கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து, சாதாரண மரணம் (174-வது பிரிவு) என பதிவு செய்யப்பட்ட வழக்கு, கொலை வழக்காக (302 பிரிவு) மாற்றப்பட்டது. சாட்சியத்தை மறைத்தல், பொய் தகவல் தெரிவித்தல் (201 பிரிவு) ஆகிய பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கறிஞர் ஜெரால்டு உடனடியாக கைது செய்யப்பட்டார். பின்னர், எழும்பூர் நீதின்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் கூறியபோது, ‘‘சரளமாக வாய் பேச முடியாத சிறுமி மிருதுளா திக்கித் திக்கி பேசியுள்ளார். இதனால், குழந்தையை தடையின்றிப் பேசவைப்பதற்காக ஜெரால்டு மின் அதிர்வு (ஷாக் ட்ரீட்மென்ட்) சிகிச்சை அளித்துள்ளார். தொடர்ந்து இதுபோல பலமுறை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சித்ரவதையை தாங்க முடியாமல் சிறுமி மிருதுளா பலமுறை மரணவேதனை அடைந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுசம்பந்தமாக தொடர்ந்து விசாரணை நடக்கிறது’’ என்றனர்.