இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அதிமுக வலியுறுத்துவதால் அதிமுக - தமாகா கூட்டணி ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 4-ம் தேதி 227 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக அறிவித்தது. கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. அந்தக் கட்சிகளும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகின்றன.
தமாகாவுக்கு தொகுதிகள் ஒதுக்காததால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிமுகவுடன் மீண்டும் தமாகா கூட்டணி பேச்சு நடத்துவதாகக் கூறப்பட்டது. அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மற்றும் சசிகலா குடும்பத்தினருடன் தமாகா எம்எல்ஏ என்.ஆர். ரங்கராஜனும் வாசன் குடும்பத்தினரும் பேச்சு நடத்தி யதாக இரு கட்சி வட்டாரங்களும் தெரிவித்தன. அப்போது அதிமுக - தமாகா கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமாவாசை தினமான வியாழக் கிழமை (7-ம் தேதி) எந்த நேரத்திலும் ஜெயலலிதாவை வாசன் சந்திப்பார் என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால், எதிர்பார்த்தபடி ஜெயலலிதா - வாசன் சந்திப்பு நேற்று நடக்கவில்லை.
தமாகா முக்கிய நிர்வாகி களுடன் தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வாசன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், ‘‘கட்சியின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு ஓரிரு நாளில் நல்ல முடிவை அறி விப்பேன்’’ என்றார்.
இது தொடர்பாக தமாகா மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அதிமுக 15 தொகுதிகள் வரை தர முன்வந்துள்ளது. ஆனால், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதிக்கிறது. தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டி யிடுவது என்பதில் வாசன் உறு தியாக இருக்கிறார். எனவே, கூட்டணி அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
அதிமுகவுடன் இழுபறி நீடிப்ப தால் மக்கள் நலக் கூட்டணியுடன் தமாகா தரப்பில் பேசி வரு வதாகவும் கூறப்படுகிறது.