தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவித்துள்ள நிலையில் அதை பல முறை சுட்டிக்காட்டியும் நடவடிக்கை எடுக்காததால் தேர்தல் ஆணையத்திற்கு அவமதிப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணியம் பாலாஜி.
இது குறித்து 'தி இந்து' தமிழ் இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகள் சமநிலையான போட்டிக்கு எதிரானது. இதைச் சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக வாட்ஸ் அப் மூலம் புகார் செய்தேன். அதற்கு தேர்தல் ஆணையத்திடமிருந்து எவ்வித பதிலும் இல்லை. பின்னர் இ மெயில் மூலம் புகார் அனுப்பினேன். தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவும் புகார் செய்தேன். ஆனால், இதுவரை எனக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. எனவே, இன்று பிற்பகல் (வியாழக்கிழமை) தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளேன். அதற்கான ஒப்புகைச் சீட்டையும் பெற்றுள்ளேன்" என்றார்.
கோரிக்கை என்ன?
"தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதால் தேர்தலை ரத்து செய்துவிட்டு மாநிலத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மீண்டும், கட்சிகளிடம் இருந்து தேர்தல் அறிக்கைகள் பெற்று அரசியல் சாசனத்துக்கு உட்பட்டும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டும் தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டும். அதன் பின்னர் தமிழகத்தில் தேர்தலை நடத்த வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைக்கிறார் வழக்கறிஞர் பாலாஜி.
இலவசங்கள் போஸ்ட் பெய்டு லஞ்சம்:
அரசியல் கட்சிகள் பல வாக்காளர்களுக்கு காசு கொடுக்கின்றன. இது ஒரு வகையில் ப்ரீபெய்டு லஞ்சம். தேர்தல் அறிக்கைகளில் அறிவிக்கப்பட்டுள்ள இலவசங்கள் போஸ்ட் பெய்டு லஞ்சம். இருசக்கர வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள்கூட அதிமுக தேர்தல் அறிக்கைக்குப் பின்னர், தங்கள் முடிவை தேர்தல் முடிவு வரை ஒத்திவைத்துள்ளனர். இதை லஞ்சம் என்று சொல்லாமல் என்னவென்று சொல்ல முடியும்.
இந்த இரண்டு வகையான லஞ்சத்தையும் தடுக்க தமிழக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் தேர்தல் எப்படி நியாயமாக நடக்கும் என கேள்வி எழுப்புகிறார் வழக்கறிஞர் பாலாஜி.
தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?
வழக்கறிஞர் சுப்பிரமணியத்தின் புகார் குறித்து தமிழக தேர்தல் ஆணைய வட்டாரத்தில் கேட்டபோது, "சுப்பிரமணியத்தின் புகார் அனைத்தும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மீது அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்" என தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு விவரம்:
ஏற்கெனவே, தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் அறிவிப்பதைத் தடை செய்யுமாறு வழக்கு தொடர்ந்திருந்தேன். அந்த வழக்கில் 2013 ஜூலை 5-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதில் "தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் உறுதி அளிக்கப்படும் எந்த வகையான இலவசங்களும் மக்களின் மேல் தனிப்பட்ட முறையில் அழுத்தத்தைக் கொடுக்கும்.
நேர்மையான, சுதந்திரமான தேர்தலின் அடித்தளத்தையே, அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் அசைக்கின்றன.
அரசியல் கட்சிகளுக்கிடையே சமநிலையான போட்டி நடக்கிற ஒரு சூழலை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக, தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில், அரசியல் கட்சிகளுக்கு உரிய முறையிலான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். ஆனால், மக்கள் நலத் திட்டங்களுக்கு இது பொருந்தாது. இதற்காகத் தனியாகச் சட்டமியற்றப்பட வேண்டிய தேவையும் இருக்கிறது" என்று நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு வழிகாட்டியது.
இதன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் 12.08.2013-ல் அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்தது. "அரசியல் சாசனத்துக்கு உட்பட்டும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டும் தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டும். வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமையைக் கவரும் வகையிலான அறிவிப்புகளைத் தவிர்க்க வேண்டும். சமமான போட்டிக்கான சூழலைப் பாதிக்கும் சலுகைகள் அறிவிப்பதைத் தவிர்க்க வேண்டும். நடைமுறையில் சாத்தியமான வாக்குறுதிகளை மட்டுமே அளிக்க வேண்டும்" என்று புதிய கட்டுப்பாடுகளை 24.04. 2015-ல் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு விதித்துள்ளது.