தமிழகம்

ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும்வரை மெரினா போராட்டம் தொடரும்: இளைஞர்கள், மாணவர்கள் திட்டவட்டம்; 5 ஆயிரம் போலீஸார் குவிப்பு

செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும்வரை மெரினாவில் நடைபெறும் போராட்டம் தொடரும் என்று அப்போராட்டத்தில் பங் கேற்று வரும் இளைஞர்களும், மாணவர்களும் அறிவித்துள்ளனர். இதனால் அங்கு 5 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், சென்னை மெரினாவில் நடத்தி வரும் தொடர் அறப்போராட்டம் 5 வது நாளை எட்டியுள்ளது. நேற்றும் பல்லாயிரக்கணக்கான மாணவர் கள், இளைஞர்கள், பொதுமக்கள் என மெரினாவில் திரண்டு போராட் டம் நடத்தினர்.

விஜய், கார்த்தி, நயன் பங்கேற்பு

நடிகர் விஜய் நேற்று அதிகாலை 2 மணிக்கு மெரினா கடற்கரைக்கு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். யாரும் அடையாளம் காண முடியாதபடி முகத்தில் கர்சீப் கட்டியபடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டார். சிறிது நேரத்துக்கு பிறகு போராட்டக் களத்தில் இருந்து வீடு திரும் பினார். இதேபோல் நடிகர் கார்த்தி, நடிகை நயன்தாரா ஆகியோரும் மெரினாவுக்கு வந்து ஜல்லிக் கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி கோயம்பேடு மலர், காய், கனி அங்காடி வியாபாரி கள் நலச் சங்கம் சார்பில், சந்தையின் 5-வது எண் நுழைவு வாயிலில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் எம்.தியாக ராஜன் தலைமை வகித்தார். அதில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப் பட்டது.

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லா வரம், பம்மல், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், முடிச்சூர், வண்டலூர், ஊரப்பாக்கம் உட்பட அனைத்து பகுதிகளிலும் பெண்கள் மாணவர்கள், பொதுமக்கள் இணைந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதர வாக போராட்டங்களை நடத்தினர். தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவமனை சார்பில் மருத்துவ கல்லூரி மாணவர்கள், எஸ்,ஆர்.எம் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டம் தொடரும்

இந்நிலையில் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வந்தது. அதை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து, இந்த சட்டமே நிரந்தர தீர்வாக இருக்கும் என்றார்.

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களும், மாணவர்களும் இதுகுறித்து நிருபர்களிடம் கூறும்போது, “ஜல் லிக்கட்டு பிரச்சினையில் நிரந்தர தீர்வுகாண வேண்டும். மத்திய வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில், காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க வேண்டும்.

அலங்காநல்லூரில் ஞாயிற்றுக் கிழமை யாரும் காளைகளை விடக்கூடாது. அதில் மாடு பிடி வீரர்கள் யாரும் பங்கேற்க கூடாது. 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களை இதுவரை முதல்வர் வந்து சந்திக்கவில்லை. அதனால் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி வைக்கக்கூடாது” என்றனர்.

போலீஸார் குவிப்பு

கடந்த 5 நாட்களாக மெரினாவில் பாதுகாப்பு பணியில், கூட்டத்துக்கு ஏற்ப 100 முதல் 3 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். போராட்டக் குழுவினர் போராட்டத்தை கைவிட மறுத்துள்ள நிலையில் நேற்று மாலை அங்கு 5 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT