வேளச்சேரியில் நடைப்பயிற்சி சென்ற 177-வது வட்ட அதிமுக பொருளாளர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை வேளச்சேரி அம்பேத்கர் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (42). வேளச் சேரி பகுதி 177-வது வட்ட அதிமுக பொருளாளராக இருந்துவந்தார். அப்பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வந்தார். பகுதி நேரமாக ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடு பட்டு வந்துள்ளார். இவர் தினமும் காலையில் நடைப்பயிற்சி செல்வார்.
இந்நிலையில் வழக்கம் போல ஏழுமலை நேற்று காலை 7 மணி அளவில் நடைப்பயிற்சி முடித்து விட்டு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வழியாக வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். இவரை 5 பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்தது. இதையடுத்து ஓட முயன்ற ஏழுமலையை அக் கும்பல் துரத்திச் சென்று வழி மறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. அந்த இடத்திலேயே ஏழுமலை ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
உயிருக்கு போராடிய அவரை அப்பகுதியினர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஏழுமலை உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த வேளச்சேரி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
ஏழுமலைக்கு மனைவி கவிதா, மகள்கள் கனிமொழி (22) கலையரசி (19) உள்ளனர். அதிமுக பொருளாளர் படுகொலை சம்பவம் வேளச்சேரி பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்யப்பட்ட ஏழுமலை மீது 2002-ம் ஆண்டு ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏழுமலை கொலை செய்யப்பட்ட தற்கு தொழில் போட்டியா அல்லது அரசியல் முன்விரோதமா என போலீஸார் விசாரிக்கின்றனர்.
ஏழுமலை.