தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் தொடரும் வேட்டை: மியான்மர் பயணியிடம் 1 கிலோ தங்கம் பறிமுதல்

செய்திப்பிரிவு

கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த மியான்மர் நாட்டு பயணியிடம் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை தூளாக்கி மாத்திரைபோல விழுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் இரவு 11.50 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது சுற்றுலாப் பயணியாக சென்னை வந்த மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஹவாய்தூ (32) என்பவரை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

தனக்கு வயிற்று வலி இருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது, பயணியின் வயிற்றில் சிறிய அளவிலான உருண்டைகள் இருப்பது தெரியவந்தது. தங்கத்தை தூளாக்கி மாத்திரைபோல விழுங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து அவருக்கு இனிமா கொடுத்து 124 தங்க மாத்திரைகளை வெளியே எடுத்தனர். அவற்றின் மொத்த எடை 1 கிலோ. தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், ஹவாய்தூவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT