சென்னை மாநகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கு குப்பைகளை வகை பிரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.
மத்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கம், கடந்த 2 ஆண்டுகளாக தூய்மை நகரங்கள் குறித்த ஆய்வை நடத்தி, பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் சென்னைக்கு 236-வது இடம் கிடைத்துள்ளது. இதற்கு, சென்னை மாநகரப் பகுதியில், குப்பைகள் உருவாகும் இடத்திலேயே மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை என வகை பிரித்து பெறாததும் ஒரு காரணம் என புகார் எழுந்தது.
இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி சார்பில், தெற்கு வட்டாரத்தில் இடம்பெற்றுள்ள மண்டலங்களில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் 200-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு குப்பைகளை வகை பிரித்தல் தொடர்பான பயிற்சி அளிக்கும் கூட்டம் பெருங்குடியில் நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சியின் சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன் பங்கேற்று, குப்பைகளை வகை பிரிப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தார். பின்னர் குப்பைகளை வகை பிரிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
இந்த பயிற்சி கூட்டத்தில் மாநகராட்சியின் தெற்கு வட்டார துணை ஆணையர் கோபால சுந்தரராஜ், பெருங்குடி மண்டல அலுவலர் சரவண பவானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர்.