ஆளுநர் உரையில் விவசாயிகளுக்கான அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் போனது கவலை தருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை நம்பிக்கையளிப்பதாக இல்லை. தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இணக்கமான உறவு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அமைக்குமாறு வேண்டுகோள் விடப்படுகிறது.
சென்னையை உலுக்கிய வார்தா புயலின் சேதத்தை மதிப்பிட 10 நாட்கள் கழித்து மத்திய அரசின் குழுவந்தது. நிவாரண நிதி 20,600 கோடி ரூபாயை உடனடியாக வழங்குமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பாரம்பரியமான துணி, நூல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை மீட்க ஒருங்கிணைந்த பதனிடும் தொழில்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் நாமக்கல், ஈரோடு, கரூர், சேலம் மாவட்டங்களின் சாயப்பட்டறைகளை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக சீரமைக்க மத்திய அரசின் உதவி பன்னெடுங்காலமாக கோரப்பட்டு வருகிறது. இந்த உரையிலும் கோரப்பட்டுள்ளது.
வரலாறு காணாத வறட்சியின் பிடியில் தமிழகம் சிக்கித்தவித்து வருகிறது. மத்திய அரசிடம் இணக்கமான உறவு இருந்தால், இதுபோன்ற பல நிவாரணப் பிரச்சினைகள் மத்திய அரசிடம் கெஞ்சிக் கேட்டுப் பெறமுடியாத நிலை ஏன் நீடிக்கிறது என்பது பற்றியோ, இதில் தீர்வு காணும் வழி பற்றியோ அறிக்கையில் ஏதுமில்லை.
மேலும் இந்த வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளையும், கிராமப் பொருளாதாரத்தையும் சீரமைப்பது, போதிய இழப்பீடு வழங்குவது பற்றியும் எதுவும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
புதிய அரசியல் சூழலில் தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் அழுத்தமாக வலியுறுத்தி வாங்குவதற்கும், தமிழக மக்களின் நியாயமான விருப்பங்களை முன்னுரிமை கொடுத்து நிறைவேற்ற மாநில அரசு முனைந்து செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்துவதற்கும் ஆளுநர் உரையில் எதுவும் இல்லாமல் போனது கவலை தருகிறது'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.