காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் வட்டம், கடப்பேரி மவுலானா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நீண்ட காலமாக வசித்து வந்தனர். திடீரென அந்த இடத்தை தன்வசம் எடுத்துக்கொண்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், அங்கு வசித்தவர்களுக்கே குறிப்பிட்ட விலையை நிர்ணயித்து 1995-ம் ஆண்டு விற்பனை செய்தது.
இங்கு வசிப்பவர்கள் அனைவரும் ஏழை, எளிய மக்கள் என்பதால், சிறுகச்சிறுக சேர்த்த பணத்தை பல்வேறு தவணைகளாக கட்டினர். மொத்த தவணைத் தொகையை கட்டி முடித்த 35-க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு விரைவில் கிரயப் பத்திரமும், அதைத் தொடர்ந்து பட்டாவும் கிடைத்துவிடும். பின்னர், இடத்தின் மீது வங்கிக் கடன் வாங்கி வீடு கட்டிக்கொள்ளலாம் என்று கனவு கண்டனர். ஆனால், நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாகிவிட்டது.
கிரயபத்திரம் குறித்து தகவல் எதுவும் இல்லாததால், அப்பகுதி மக்கள் குடிசை மாற்று வாரியத்தை நாடினர். மவுலானா நகர் மனைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலம், வருவாய்த் துறையிடம் இருந்து குடிசை மாற்று வாரியத்துக்கு மாற்றப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேறு வழியில்லாமல் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்வதற்காக ஒதுக்கீடுதாரர் சிந்தாமணி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2012-ம் ஆண்டு தகவல் கோரினார். அப்போது மனை ஒதுக்கப்பட்ட 115 பேரில் 35 பேர் முழு தவணைத் தொகை செலுத்திவிட்டதாகவும், 50 பேர் முழு தவணைத் தொகை கட்டவில்லை எனவும், 30 பேருக்கு ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்படவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக சிந்தாமணியின் கணவர் மகாலிங்கம் நமது நிருபரிடம் கூறும்போது, “மவுலானா நகரில் எனது மனைவி பெயரில் 1-12-1995-ல் மனை ஒதுக்கீடு செய்யப்பட்டது. 31-12-2007-ல் முழுத் தொகையான ரூ.73 ஆயிரத்து 143 செலுத்திவிட்டேன்.
மன உளைச்சல்
ஒதுக்கீடுதாரர் மொத்த கிரயத் தொகையையும் வாரியத்துக்கு செலுத்திய பிறகு, மனை ஒதுக்கீடு செய்த நாளில் இருந்து 5 ஆண்டுகள் முடிந்திருந்தால் கிரயப் பத்திரம் வழங்க வேண்டும் என்பது விதி. நான் 2007-ம் ஆண்டுடன் மொத்த கிரயத் தொகையையும் செலுத்திவிட்டேன்.
அன்று முதல் 8 ஆண்டுகளாக கிரயப் பத்திரத்துக்கு அலைந்து அலைந்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதுதான் மிச்சம். இங்கு பலரது நிலைமையும் என்னைப் போலத்தான் இருக்கிறது” என்று வேதனையுடன் தெரிவித்தார்.