கரூர் மாணவி, தூத்துக்குடி ஆசிரியை படுகொலை வழக்குகளை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை சுவாதி, விழுப்புரம் நவீனா படுகொலைகளால் ஏற்பட்ட அதிர்ச்சி நீங்குவதற்கு முன்பாகவே கரூரில் காதலிக்க மறுத்த பொறியியல் மாணவி சோனாலி கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். அதேபோல், தூத்துக்குடியில் மாணவனை காதலிக்க மறுத்த ஆசிரியை பிரசினா வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். காதலின் பெயரால் மாணவிகள், சிறுமிகளுக்கு இழைக்கப்படும் மிருகத்தனமான கொடுமை அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மாணவிகளையும், இளம் பெண்களையும் சில மிருகங்கள் துரத்தி துரத்தி காதலிப்பதாக தொல்லை கொடுப்பதும், காதலை ஏற்க மறுக்கும் பெண்களை கொடூரமாக கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது. காதல் என்பதே அன்பின் வெளிப்பாடுதான். ஆனால், அன்பை வெளிப்படுத்துவதாக கூறுபவர்களால், அது ஏற்கப்படவில்லை என்றதுமே, அன்பு செலுத்த விரும்பியவர்களையே கொலை செய்ய முடிவது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. கொலை வெறியைத் தூண்டுவது எவ்வகையான காதலாக இருக்கும் என்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
காதலிப்பதாகக் கூறி மாணவிகளை பின்தொடர்ந்து சென்று தொல்லை தருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் பெண்களை பாதுகாக்க முடியும். ஆனால், அதை செய்ய அரசு தயங்குவது ஏன்? என்று தெரியவில்லை. பெண்கள் பாதுகாப்புக்காக கடந்த 01.01.2013 அன்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்த 13 அம்சத் திட்டத்தில்,''பொதுமக்கள் அதிகமாக நடமாடும் வணிக மையங்கள், பெண்கள் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில் பெண்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடியவர்களின் நடமாட்டத்தைச் சீருடை அணியாத காவல்துறையினர் கண்காணித்து இத்தகையக் குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பர்'' என்று கூறப்பட்டிருந்தது.
அதுமட்டுமின்றி, இவ்வாறு தொல்லை தருபவர்களை தண்டிப்பதற்காக இந்திய தண்டனை சட்டத்தில் 345டி என்ற புதிய பிரிவை கடந்த 2013 ஆண்டு மத்திய அரசு சேர்த்தது. ஆனால், முதல்வரின் திட்டமும், மத்திய அரசின் சட்டமும் செயல்படுத்தப்படாததால்தான் பெண்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களுக்கும், அலுவலகங்களுக்கும் செல்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதற்காக கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட மகளிர் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்துவதுடன், கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களிலும் பெண்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, கரூர் பொறியியல் மாணவி சோனாலி, தூத்துக்குடி ஆசிரியை பிராசினா ஆகியோரின் படுகொலை வழக்குகளை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து கொலையாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.