சென்னையில் ஏழை பெண்கள், முதியோர்களை குறிவைத்து போலி சான்றிதழ்களை தயாரித்து விற்று வரும் இடைத்தரகர்களை கைது செய்ய போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.
போலி பாஸ்போர்ட், விசா, பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள், அரசு அதிகாரிகளின் பெயர் பொறிக்கப்பட்ட ரப்பர் ஸ்டாம்புகளை கும்பல் ஒன்று அச்சடித்து விநியோகம் செய்து பல கோடி ரூபாய் பணம் சம்பாதித்தது. இவர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர். அதன் பிறகு இந்த கும்பலின் நடமாட்டம் கட்டுக்குள் வந்தது.
ஆனால், சட்ட விரோதமாக, போலி சாதி சான்றிதழ்கள், வாரிசு சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை அச்சடித்து அதில், வட்டாட்சியர் கையெழுத்திட்டு கும்பல் ஒன்று மோசடியில் ஈடுபட்டு வருவதாக சென்னை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இடைத்தரகர்கள் கைது
மோசடியை உறுதிப்படுத்தும் வகையில் மயிலாப்பூர் வட்ட வருவாய் ஆய்வாளர் சந்திரசேகரன் அபிராமபுரம் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், மயிலாப்பூர் வட்டாட்சியர் கையெழுத்திட்டு விநியோகம் செய்ததுபோல் சிலர் சான்றிதழ்களை போலியாக தயார் செய்து விநியோகம் செய்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன்படி, போலீஸார் விசாரணையில் இறங்கினர். மோசடியில் ஈடுபட்டதாக தேனாம்பேட்டை கணேசபுரம் 2-வது தெருவை சேர்ந்த குமார் (43) என்ற இடைத்தரகரை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சிறிய பெட்டிக்கடை வைத்து குமார் தயாரித்த போலி சான்றிதழ்களை விற்பனை செய்து வந்த ராஜாமுத்தையாபுரத்தில் வசித்து வரும் மஞ்சுளா (41) என்ப வரையும் போலீஸார் கைது செய்திருந்தனர்.
ரூ.5 ஆயிரம் வரை வசூல்
இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். வட்டாட் சியர் அலுவலகத்துக்கு சாதி சான்றிதழ்கள், வாரிசு சான்றிதழ் களை கேட்டு வருபவர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், பலருக்கு இந்த நடைமுறை தெரியாது. குறிப்பாக ஏழை பெண்கள், முதியோர்கள் இந்த முறை தெரியாமல் தவிக்கின்றனர்.
எனவே, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வெளியே அமர்ந்து மனு எழுதி கொடுப் பவர்களிடம் செல்கின்றனர். அப்படி மனு எழுதி கொடுக்கும் வேலையைத்தான் குமார் முதலில் செய்துள்ளார். அப்போது, சிலர் சான்றிதழ் கிடைக்க தாமதமாவதாக குமாரிடம் விரக்தியை வெளிப் படுத்தியுள்ளனர். அப்போதுதான் குமாருக்கு இந்த மோசடி யோசனை ஏற்பட்டுள்ளது. அதன்படி, வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படும் வாரிசு சான்றிதழ், சாதி சான்றிதழ்களை இவரே தயாரித்துள்ளார்.
வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சான்று கேட்டு வருபவர்களை இவரே அணுகி உள்ளார். பின்னர், அதிகாரி தொனியில் ஒரு சில நாட்கள் தாமதம் செய்து பின்னர், தாம் தயாரித்த போலி சான்றிதழ்களை சம்பந்தப் பட்டவர்களுக்கு வழங்கியுள்ளார். இதற்காக ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வசூல் செய்துள்ளார். இவரது குறி ஏழை பெண்கள், படிக்காதவர்கள், முதியவர்கள்தான். அவரை தற்போது போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கண்காணிப்பு தீவிரம்
சென்னையில் வேளச்சேரி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர் உட்பட 10 இடங்களில் வட்டாட்சியர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கும் குமார் போன்று பல இடைத்தரகர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களில் மோசடி செய்பவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் பணியை சென்னை போலீஸார் முடுக்கிவிட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக நுண்ணறிவு மற்றும் உளவுப் பிரிவு போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் விரைவில் பலர் கைதாக வாய்ப்பு உள்ள தாக போலீஸ் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னையில் உள்ள வட்டாட்சியர் ஒருவர் கூறும்போது, “தற்போது அனைத்து ஆவணங்களும் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மனுக்களின் எண்ணிக்கையை பொருத்து 3 நாட்கள் முதல் ஒரு வாரத்துக்குள் முறை யாக ஆவணங்களுடன் இருக் கும் விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் கேட்கும் சான்று வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு யாருடைய சிபாரிசும் தேவை இல்லை. வாரிசு சான்றிதழ், சாதி சான்றிதழ்களுக்கு சில இடங்களில் கையால் எழுதப்பட்ட மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதை சில புரோக்கர்கள் தவறாக பயன்படுத்தி அப்பாவி மக்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அனைத்தும் ஆன்-லைனில் வர உள்ளன. அப்போது இடைத்தரகர்களின் செயல்பாடு முற்றிலும் முடக்கப்படும். பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு கொடுக்க வேண்டும். வேறு யாரையும் நம்பி ஏமாற வேண்டாம்’’ என்றார்.