தமிழகம்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை தொடங்கும்: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

கேரளாவில் நாளைமுதல் (ஜூன் 9) தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:

தெற்கு அரபிக் கடலில் ஈரப்பதமான காற்று அதிகரிக்கும் நிலையில், கேரளத்தில் நாளைமுதல் (ஜூன் 9) தென்மேற்கு பருவமழை தொடங்கும். வழக்கத்தைவிட இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை அதிகமாக இருக்கும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஒரு சில இடங் களில் கோடை மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக செம்பரம்பாக்கத்தில் 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக் கூடும்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் மழையோ, இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் பலத்த மழை

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் ஆர்.கே.பேட்டை, ஸ்ரீபெரும்புதூர், தக்கலை, வடசென்னை, பூதப்பாண்டி ஆகிய இடங்களில் தலா 40 மி.மீ. ஆரணி, பேச்சிப்பாறை, கொளப்பாக்கம், சென்னை விமான நிலையம், திருத்தணி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் தலா 30 மி.மீ. மழை பதிவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நேற்று இடி, மின்னல் சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது. நுங்கம்பாக்கம், திருவல்லிக் கேணி, சேப்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், கொடுங்கையூர், ஆவடி, அம்பத்தூர், தரமணி, அண்ணா பல்கலைக்கழகம், புழல், செங்குன்றம் உட்பட பல இடங்களில் மழை பெய்தது. கோடை மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வெப்பம் தணிந்து காணப்பட்டது.

SCROLL FOR NEXT