21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று அனைத்து டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கும் அறி வுறுத்தப்பட்டுள்ளதாக உயர் நீதி மன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் பதிலளித்துள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் கே.பாலு மனு தாக்கல் செய்துள்ளார்.
மது விற்பனை மூலம் தமிழக அரசு பெருமளவு வருவாய் ஈட்டுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் டாஸ்மாக் நிறுவனத்தின் மது விற்பனையால் ரூ.22 ஆயிரம் கோடி வருவாயாக கிடைத்து உள்ளது. ஆனால் இந்த மது விற்பனையின் காரணமாக சாலை விபத்துகள், கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பலவித நோய்கள், குடும்ப வன்முறை போன்ற பல பாதிப்புகள் பொதுமக்களுக்கு ஏற்படுகின்றன.
இதற்கிடையே 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என்று தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டது. ஆனால் அரசின் இந்த முடிவு அமல்படுத்தப்படவில்லை என்று பாலு தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்யநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்கு நரின் பதில் மனு அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
21 வயதுக்கு குறைந்தவர் களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்று அனைத்து டாஸ்மாக் மதுக்கடை பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து அவ்வப்போது ஆய்வு நடத்துமாறு மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
அதேபோல் 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்பனை இல்லை என்ற அறிவிப்பு பலகை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வைக்கப்பட்டுள்ளது என்று அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நடப்பது என்ன?
டாஸ்மாக் நிறுவனம் அளித்துள்ள பதில் குறித்து மது விற்பனைக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் காந்தியவாதி சசிபெருமாள் கூறியதாவது:
மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என்று எழுதி வைத்துவிட்டுத்தான் இங்கு மது விற்பனை செய்கிறார்கள். இவர்களுக்கு வருவாய்தான் முக்கியமே தவிர, மக்களின் உடல் நலன் பற்றி எவ்வித அக்கறையும் இல்லை.
இப்போது நீதிமன்றத்தில் வழக்கு வந்துள்ளது என்பதற்காக 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை இல்லை என்று எழுதி வைக்கிறார்களே தவிர, உண்மையிலேயே 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யமாட்டார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், மது விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்றார் சசிபெருமாள்.
மது விற்பனை தொடர்கிறது
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் கே.பாலு, ‘தி இந்து’விடம் கூறியதாவது:
21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யப்பட மாட்டாது என்று டாஸ்மாக் நிறுவனம் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆனால் இப்போதும் கூட பள்ளிச் சீருடையுடன் டாஸ்மாக் கடைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து நாங்கள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம் என்றார் பாலு.