திருச்சியில் நிகழ்ந்த ஐந்து கொலை விவகாரத்தில் தினம் ஒரு அதிர்ச்சித் தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.
யமுனா மீது கொண்ட மோகத்தால் அடுத்தடுத்து 5 கொலைகளை அரங்கேற்றிய ஜோதிடர் கண்ணன், இப்போது காவல்துறை விசாரணையில் சில சாமியார்களின் பழக்க வழக்கம் காரணமாகவே தான் கொலையாளியாக மாறியதாக கூறுகிறாராம்.
அந்த சாமியார்களிடம் கண்ணனுக்கு சரியான உறவு இல்லாததால் அவர்களை வேண்டுமென்றே மாட்டிவிட முயற்சி செய்கிறார். அதில் உண்மையில்லை என்கிறது காவல்துறை தரப்பு.
“திருச்சி ரங்கம் மேலூர் சாலையில் அங்காள பரமேஸ்வரி கோயில் கட்டி தனியாக மாந்திரீக வேலை செய்துவரும் பெரியசாமி என்கிற சாமியார்தான் தன்னை வழிமாற்றியதாக சில சமயம் சொல்கிறார் கண்ணன். அவருடன் சில காலம் நட்புடன் இருந்த கண்ணன் பிறகு அவரிடமிருந்து பிரச்சினை செய்து பிரிந்து சென்றுவிட்டார். இப்போது எங்களிடம் பெரியசாமியைப் பற்றி எதையாவது சொல்லி மாட்டிவிட்டு அவர் மீதிருந்த கோபத்தை பழிதீர்த்துக் கொள்ள இந்த சந்தர்ப்பத்தை வாய்ப்பாகப் பயன்படுத்த நினைக்கிறார்.
மேலும் பழனி அருகே கணக்கம்பட்டியில் உள்ள அழுக்கு மூட்டை சித்தர் என அழைக்கப்படும் காளிமுத்து மீதும் குற்றம் சுமத்துகிறார். “அவர் பெண்களை வசியம் செய்து அனுபவிப்பார். அவரைப் பார்த்துதான் நானும் கெட்டுப்போய் விட்டேன்” என்றும் சொல்கிறார் கண்ணன். எங்களது பலகட்ட விசாரணையில் கண்ணன் செய்த கொலைகளுக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. யமுனாவின் மீது கொண்ட மோகம் காரணமாகத் தொடர்ந்து பல கொலை களை செய்திருக்கிறார். அவரை ஜாமீனில் எடுக்கக்கூட யாரும் முன்வராத தால் கொஞ்சம் பணபலத்துடன் உள்ளவர் களையும் இந்த வழக்கில் சம்பந்தப்படுத்தி னால் அவர்கள் இவருக்கு உதவுவார்கள் என்கிற எண்ணத்தில் அப்படி சொல்வதாக நாங்கள் நினைக்கிறோம். ஆனால், அவர்கள் மீதும் ஒரு கண் வைத்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்கிறார்கள் கொலை வழக்குகளை விசாரித்துவரும் சிபிசிஐடி காவலர்கள்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கை எடுத்து நடத்தினால் நல்ல விளம்பரம் கிடைக்கும் என நினைத்த வழக்கறிஞர் அணி ஒன்று, யமுனாவை பிணையில் எடுக்க முயற்சித்து அவரை சிறையில் சந்தித்திருக்கிறது. “எனது கணவர், இரண்டு பிள்ளைகள் என அனைவரையும் இழந்து விட்டேன். அவர்கள் இல்லாத வீட்டில் நான் போய் இருக்க விரும்பவில்லை. நான் இங்கேயே இருந்துகொள்கிறேன். என்னை இப்போதைக்கு யாரும் சந்திக்க வரவேண்டாம்” எனக் கூறி அந்த வழக்கறிஞர்களை அனுப்பி வைத்தாராம் யமுனா.
யமுனாவின் கணவர் தங்கவேலு கொலைக்கான எந்த தடயமும் இதுவரை காவல்துறையினருக்கு கிடைக்கவில்லை. அந்த வழக்கில் வேறு எந்த சாட்சிகளும் இல்லை. கண்ணன் சொல்வதைக் கேட்டு அந்த கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிப்பதில் சில சிக்கல்கள் உள்ளன என்கின்றனர் காவல்துறையினர்.
“நம்பத்தகுந்த சாட்சியமும் போதுமான தடயமும் இல்லாத சூழலில் குற்றவாளியான கண்ணன் மட்டும் சொல்வதைக் கேட்டு நாங்கள் குற்றப்பத்திரிகை தயாரித்து வழக்கு நடத்தும்போது ஒருவேலை தங்கவேல் உயிருடன் திரும்பி வந்துவிட்டால், எங்களின் ஒட்டுமொத்த விசாரணையும் கேள்விக்குறியாகிவிடும். எங்கள் மீதான நன்மதிப்பு அடியோடு தகர்ந்துபோகும். அதனால், தங்கவேல் வழக்கை மட்டும் தனியாக பிரித்து நடத்த ஆலோசித்து வருகிறோம்” என்கிறார்கள் சிபிசிஐடி காவல்துறையினர்.