விபத்துகளைத் தவிர்த்து மனித உயிர்களைக் காப்பதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் எழுதி வெளியிட்ட முகநூல் பதிவில், ''கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தனியார் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் பயணிகள் 17 பேர் பரிதாபமாக இறந்ததும், 35 பேர் படுகாயமடைந்ததும் பெரும் வேதனையை அளிக்கிறது. நெடுஞ்சாலைகளில் நடைபெறும் இத்தகைய விபத்துகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதன்மையாக இருப்பது கவலைக்குரிய ஒன்று.
வாகனங்களை ஓட்டும்போது மிகுந்த கவனமும் பொறுப்பும் தேவைப்படுகிறது. கவனம் சிதறி, பொறுப்புத் தவறும்போது அப்பாவி பயணிகளின் உயிர் பறிபோகிறது. அதே வேளையில், சாலை விபத்துகளைத் தடுக்கின்ற வகையில் அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.
பழிவாங்கும் நோக்கத்துடன் வேலை பறிக்கப்பட்ட சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படுவதுடன், நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்றுவதில் பிடிவாதம் காட்டாமல் செயல்பட வேண்டும். அரசாங்கத்தின் வருமானத்தைவிட மனித உயிர் என்பது மிகவும் மேலானது. அவற்றைக் காப்பதுதான் அரசின் முதல் கடமை. மனித உயிர்கள் பறிபோவதற்கு அரசாங்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ துணைபோகக்கூடாது.
நெடுஞ்சாலைகளில் போதிய பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தி, வாகனங்களின் தரத்தை சோதனையிட்டு, வேகக்கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைக் கடைப்பிடிக்கச் செய்து, விபத்துகளைத் தவிர்த்து மனித உயிர்களைக் காப்பதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, காயமடைந்தவர்கள் விரைந்து நலன்பெற வேண்டுகிறேன்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.