சேது சமுத்திரத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்ததன் மூலம், தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை முதல்வர் ஜெயலலிதா புறக்கணிக்க முயற்சித்துள்ளார் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "அதிமுக அரசின் சார்பில், மேலும் ஒரு மனுவை உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். சேது சமுத்திரத் திட்டத்திற்காக 1967ஆம் ஆண்டு அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றவுடன், திமுகவினரையும், தமிழ்நாட்டு மக்களையும் பார்த்து விடுத்த வேண்டுகோள், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதாகும்.
அண்ணாவின் அந்த விருப்பத்தை நிறைவேற்ற, அந்தக் கனவை நனவாக்க, முயற்சிகள் எடுத்துக் கொண்டு, திராவிட இயக்கத்தாராகிய நாங்கள் பாடுபடும்போது, இன்றைக்கு இருக்கின்ற ஜெயலலிதா அரசு, ஏற்கனவே ஒரு முறை இந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று தடை கோரியிருக்கிறது.
இரண்டாவது முறையாகவும், ஏற்கனவே தாங்கள் சொல்ல விட்டுப் போன விஷயங்களைச் சொல்லுகிறோம் என்று சொல்லி, சேது சமுத்திரத் திட்டத்தைக் கைவிட வேண்டுமென்று உச்ச நீதி மன்றத்திற்கு மேலும் ஒரு முறையீடு செய்திருக்கிறது.
அண்ணா அவர்களின் எண்ணங்களை, தமிழ்நாட்டு மக்களுடைய தேவைகளை ஜெயலலிதாவும், அவர் தலைமையிலுள்ள இந்த ஆட்சியும் எந்த அளவுக்குப் புறக்கணிக்க முற்படுகிறார்கள் என்பதற்கு இதுவே தக்க அடையாளம்" என்றார் கருணாநிதி.