ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் நேற்று லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோல, சென்னை முழுவதும் 92 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும். இதற்காக முதல்வரும், தமிழக எம்பிக்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 17-ம் தேதி காலை தொடங்கி நடைபெற்றுவரும் போராட்டம் 3-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் திரண்டதால் மெரினா கடற்கரை மக்கள் வெள்ளத்தில் மூழ்கி யது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.
இதுதவிர, ஏராளமானோர் ஜல்லிக்கட் டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பதாகைகளை கையில் ஏந்தி வந்திருந்தனர். போராட்டத் தில் ஈடுபட்ட மாணவர்களை நடிகர்கள் லாரன்ஸ், கார்த்தி, சத்யராஜ், ஆரி, மன்சூர் அலிகான் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அவர்களும் மாணவர்களுடன் இணைந்து ஜல்லிக்கட் டுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அரசியல்வாதிகள் யாரையும் போராட்டம் நடைபெறும் இடத்துக்குள் மாணவர்கள் அனுமதிக்கவில்லை
மவுன போராட்டம்
போராட்டத்தின் ஒரு பகுதியாக காலை 10 மணி முதல் 30 நிமிடங்களுக்கு மாணவர்கள் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஜல்லிக்கட்டின் முக்கியத்துவம், விவசாயிகள் மரணம் உள்ளிட்ட தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்து மாணவர்கள் பேசினர். கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் சாலையின் நடுவிலும், ஓரங்களிலும் தடுப்புகளை கொண்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வெளிநாட்டு குளிர்பானங்கள் தவிர்ப்பு
நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து பஸ்கள், வேன்கள், கார்கள், இருசக்கர வாகனங்களில் மெரினா கடற்கரை நோக்கி மாணவர்கள், இளைஞர்கள் அணியணியாக திரண்டனர். இதனால் மெரினா கடற்கரைக்கு செல்லும் சாலைகள் போக்குவரத்து நெரிசலால் திணறின. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு போதுமான அளவு குடிநீர் பாக்கெட்கள், பிஸ்கெட்கள், உணவுப் பொட்டலங்களை தன்னார்வலர்கள் வழங்கினர். மேலும் வெளிநாட்டு குளிர்பானங்களை அருந்த மாட்டோம் என தெரிவித்த மாணவர்கள் அவற்றை அருந்துவதையும் தவிர்த்தனர்.
காவல் ஆணையர் பேச்சுவார்த்தை
சென்னையில் மெரினா கடற்கரை தவிர கே.கே நகர், பெரியமேடு, பாரிமுனை, பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்பட சென்னையில் 92 இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட் டங்கள் நடைபெற்றன. மெரினாவில் லட்சக்கணக்கானோர் திரண்டதால் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் நேற்று மதியம் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துவிட்டனர். காவல் ஆணையரு டன் கூடுதல் காவல் ஆணையர்கள் சங்கர், தாமரைக்கண்ணன், தர் உடனிருந்தனர்.
மக்கள் ஆதரவு தர கோரிக்கை
தங்களின் அடுத்த கட்ட போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள், “மாணவர்கள் நடத்திவரும் இந்த போராட்டம், மக்கள் போராட்டமாக மாறினால் மட்டுமே வெற்றி கிட்டும்.
எனவே, அரசு ஊழியர்கள், பொதுமக்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, போராட்ட களத்துக்கு வந்து போராட வேண்டும். மேலும், எங்களுக்கு எந்த முடிவும் கிடைக்காவிட்டால் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டையை நாளை (இன்று) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைப்போம்” என்று தெரிவித்தனர்.
ஐ.டி ஊழியர்கள் போராட்டம்
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள ‘மெப்ஸ்’ வளாகத்தில் பணிபுரியும் கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர்கள் நேற்று மெப்ஸ் வளாக நுழைவு வாயிலில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
இதேபோல, கிழக்கு தாம்பரம், வேளச்சேரி சாலை, பெருங்களத்தூர் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் மாணவர்கள், கம்ப்யூட்டர் இன்ஜினீயர்கள், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நங்கநல்லூர் 4-வது பிரதான சாலை, ஆலந்தூர், ஆதம்பாக்கம், மேடவாக்கம், தாம்பரம் முடிச்சூர் சாலை, பெருங்களத்தூர், லட்சுமிபுரம், சேலையூர் மகாலட்சுமி நகர் பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட் டனர். இதுதவிர, குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலம் அருகில் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லாவரம் பஸ் நிலையம் அருகில் பொதுமக்கள் இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத் தினர்.
நடிகர்கள், அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கையில் ஏந்தி வந்த பேனரில் திரைப்பட நடிகர் ஒருவரின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள், ‘நடிகர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. உணர்வால் இணைந்த இளைஞர்கள் போராட்டத்தை நடத்தி வருகிறோம். எனவே, அந்த பேனரை ஏந்திப் பிடிக்க வேண்டாம்’ என கேட்டுக்கொண்டனர்.
மேலும், ‘‘போராட்டத்தில் கலந்துகொள்ளும் நடிகர்கள் தமிழர்களாக மட்டும் இங்கு வந்து கலந்து கொள்ளலாம். நடிகர்களாக வர வேண்டாம். மேலும், அரசியல்வாதிகள் யாரும் இங்கு வர வேண்டாம். எங்களுக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம். அவர்கள் ஏதேனும் உணவு பொருட்களை அளித்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்றனர்.