நிலமோசடி, கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல தாதா ஸ்ரீதர் இலங்கையில் தலைமறைவாக இருக்கிறார். அவர் விரைவில் பிடிபடுவார் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பருத்திகுன்றம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ஸ்ரீதர் (44), செந்தில்(40). இருவரும் காஞ்சிபுரத்தில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்று வந்தனர். 2009-ல் இருவரையும் குண்டர் சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர். 6 மாதத்தில் வெளியே வந்த ஸ்ரீதர், ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார்.
அதுமுதல் அவரது வளர்ச்சி வேகம் அதிகரித்தது. அவரது தொழில் போட்டியாளர்கள் சிலர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட் டனர். ஸ்ரீதர் மீது 7 கொலை வழக் குகள், 12 கொலை முயற்சி வழக்கு கள் உட்பட மொத்தம் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த தமிழக காவல் துறை, அவரைப் பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், 2013-ல் துபாய் சென்ற ஸ்ரீதர், பின்னர் இந்தியா வரவே இல்லை. வெளிநாட்டில் இருக்கும் ஸ்ரீதரைப் பிடிக்கும் முயற்சியில் அமலாக்கத் துறை அதிகாரிகளும் தற்போது களம் இறங்கியுள்ளனர். இதுகுறித்து கேட்டபோது அதிகாரிகள் கூறிய தாவது:
காஞ்சிபுரத்தில் பலரை மிரட்டி நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்று, தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார் ஸ்ரீதர். இவ்வாறு சம்பாதித்த பணத்தை சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். அந்த பணத்தைக் கொண்டு, துபாயில் எண்ணெய் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அதில் கிடைக்கும் பல கோடி மதிப்பிலான பணத்தையும் சட்டவிரோதமாக தமிழகத்துக்குள் கொண்டு வருகிறார். இதையடுத்து, அவரைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளோம்.
அவரது பாஸ்போர்ட் கடந்த ஆண்டு முடக்கப்பட்டது. ஆனாலும், 2017 வரை துபாயில் தொழில் நடத்துவதற்கான விசா இருப்பதால், அங்கேயே வசித்து வந்தார். துபாயிலேயே அவரைப் பிடிக்க முயற்சி செய்த நிலையில், அங்கிருந்து தப்பிவிட்டார்.
காஞ்சிபுரத்தில் கடந்த ஆண்டு ஜூலையில் ரூ.30 கோடி நிலத்தை ஸ்ரீதரின் நண்பர்கள் ரூ.5 கோடிக்கு வாங்கினர். அப்போது, அவர்களை தொடர்புகொண்ட ஸ்ரீதர், துபாயில் இருந்துதான் போனில் பேசியுள்ளார். அதனால், ஜூலை வரை அவர் துபாயில்தான் இருந்துள்ளார். அவர் போலி பாஸ் போர்ட் மூலம் மலேசியா அல்லது இலங்கைக்கு தப்பியிருக்கலாம் என்று தகவல் கிடைத்தது.
ஸ்ரீதரின் மகள் லண்டனில் பிபிஏ படிக்கிறார். சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீதரின் மனைவி, மகள், தம்பி ஆகியோர் சொந்த ஊரான காஞ்சிபுரத்துக்கு வந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, ஸ்ரீதர் இருப்பிடம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளனர்.
சர்வதேச நிழல்உலக தாதா தாவூத் இப்ராகிம் போலவே, காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதரும் போன் மூலம் மிரட்டியே ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். அவர் இலங்கையில் தலைமறைவாக இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.