காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பு, காங்கிரஸுக்கு கிடைத்த புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பரிசு என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் திங்கள்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது: காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதை காங்கிரஸ் தொண்டர்களுக்கு கிடைத்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பரிசாக கருதுகிறோம்.
இந்த அறிவிப்புடன் நிற்காமல், காங்கிரஸ் ஆதரவுடன் ராஜ்யசபா உறுப்பினரான கனிமொழி, தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படி உண்மையில் நடந்தால், கருணாநிதியை சுயமரியாதைத் தமிழர் என்று ஏற்றுக் கொள்வோம். இன்னும் மகிழ்ச்சி அடைவோம்.
கடந்தமுறை தமிழகத்தில் மைனாரிட்டியாக இருந்த திமுக அரசை காங்கிரஸ்தான், எந்தப் பதவியும் பெறாமல் ஐந்து ஆண்டுகள் ஆதரவு கொடுத்து, ஆட்சியை நிலைக்க வைத்தது. இதை கருணாநிதி மறந்திருக்க மாட்டார். குடும்ப வாரிசுகளுக்குத்தான் அவர் முக்கியத்துவம் அளித்தார்.
திமுக ஆட்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இழிவாக நடத்தப்பட்டனர். எங்களுக்கு சுயமரியாதை உண்டு. எதிர்காலத்தில் திமுகவுடன் எந்தவிதத்திலும் உறவு ஏற்பட வாய்ப்பில்லை. சி.பி.ஐ. குறித்து கருணாநிதி கூறிய கருத்தை ஏற்க முடியாது.
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான திமுக என்ற சுமையை பா.ஜ.க.வின் தேசியத் தலைவர்கள் சுமக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
இதற்கிடையே, காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று திமுக அறிவித்துள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்து, சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.