கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் உள்ள வீட்டியூர், பாடவயல், மஞ்சிக்கண்டி, தேக்குவட்டை, கீரைக்கடவு, ரங்கநாதபுரம் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
தேக்குவட்டை அணை பணிகள் முடிவடைந்து, மஞ்சிக்கண்டி கிராமத்தில் அணை கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனால், கீழ் பகுதியில் உள்ள கிராமங்களில் பவானி ஆறு வறண்டுள்ளது.
இதனால் அட்டப்பாடி விவசாயிகளில் ஒரு பகுதியினர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்துக்கு அருகே உள்ள சாவடியூர் பகுதியில் ஆற்றுப் பகுதி பாலைவனம்போல மாறிவிட்டது. இதையடுத்து, பவானி ஆற்றிலிருந்து குடிநீர்த் தேவையைத் தவிர, மற்ற காரணங்களுக்காக மோட்டார் பம்ப்செட்டுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சுவதை நிறுத்துமாறு அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இங்குள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு மோட்டார் மூலமே தண்ணீர் எடுக்கப்படுகிறது. திடீரென மோட்டார் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கூறினால், ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை, பாக்கு, காய்கறிப் பயிர்கள் நாசமாகும் என்று தெரிவித்த விவசாயிகள், தங்களுக்குள் ஆலோசனை நடத்தி, முறைப் பாசனத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
பவானி நதி பாயும் முக்காலியிலிருந்து வீட்டியூர் வரை 1-ம் பிரிவு, வீட்டியூரிலிருந்து மஞ்சிக்கண்டி வரை 2-ம் பிரிவு, மஞ்சிக்கண்டியிலிருந்து சீரக்கடவு வரை 3-ம் பிரிவு, சீரக்கடவு முதல் முள்ளி வரை 4-ம் பிரிவு என பிரித்துக்கொண்டு, ஒரு நாள் முழுவதும் ஆற்றில் தண்ணீர் எடுக்காமல் இருக்கவும், அடுத்த நாள் முதல் ஒரு பிரிவினர் தவிர்த்து 3 பிரிவினர் தண்ணீரை எடுப்பது எனவும், இதேபோல தொடர்ந்து முறைவைத்து தண்ணீரைப் பயன்படுத்துவது எனவும் பஞ்சாயத்து தலைவர்கள் முன்னிலையில் முடிவு எடுத்தனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அனுமதி வழங்காத நிலையிலும், இந்த முறையை கடந்த வாரம் முதல் விவசாயிகள் அமல்படுத்த தொடங்கினர். இது சில நாட்கள் மட்டுமே நன்றாக நடந்துள்ளது.
ஒப்பந்தத்தை மீறிய விவசாயிகள்
ஆனால், பின்னர் ஒப்பந்தத்தை மீறி ஒரு பிரிவினர் தண்ணீரை எடுத்ததால் பிரச்சினை ஏற்பட்டது. அதை கண்காணிப்புக் குழுவினர் கண்டுபிடித்துக் கேட்டபோது, சம்பந்தப்பட்ட விவசாயிகள், இன்று நாங்கள் தண்ணீர் பயன்படுத்தக்கூடாத நாள் என்பது கவனத்தில் இல்லை என்று பதில் கூறியுள்ளனர். இதேபோல மற்றவர்களும் கூறியுள்ளனர்.
இன்னும் சிலரோ “எங்கள் பயிர்கள் வாடியுள்ளன. எனவேதான், தண்ணீரை எடுத்துள்ளோம்” என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் மறுபடியும் சாவடியூர் பகுதிக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது.
இதையடுத்து, விவசாயிகள் குழுவினர் இரு தினங்களுக்கு முன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். பின்னர், வாரத்தில் ஒரு நாள் யாரும் தண்ணீர் எடுக்கக் கூடாது என்றும், திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் குறிப்பிட்ட 2 பிரிவினரும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் மற்ற 2 பிரிவினரும் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் எடுத்துக் கொள்வது எனவும் இக்கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறும்போது, “திட்டமிட்டபடி நடந்துகொள்ளாத விவசாயிகளால் மீண்டும் சாவடியூர் பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை. அந்தப் பகுதி விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
அதற்கு மேல் பகுதியில் உள்ள விவசாயிகள் ‘பவானி ஆற்றில் சில நூறு மோட்டார்களே உள்ளன. சிறுவாணி ஆற்றில்தான் ஆயிரக்கணக்கில் மோட்டார்கள் உள்ளன. அங்கே தண்ணீர் எடுப்பதால்தான் கீழ் பகுதி பவானிக்கு தண்ணீர் வரவில்லை. இதை யார் கட்டுப்படுத்துவது’ என்று கேட்கிறார்கள்.
எனவே, இது தொடர்பாக பஞ்சாயத்து மூலமாகவே தண்டோரா அடித்தும், ஆட்டோ மூலமாகவும் பிரச்சாரம் செய்யுமாறு வலியுறுத்தியள்ளோம். விவசாயிகள் முறைப் பாசனத்துக்கு ஒத்துழைத்தால், கேரளா மட்டுமின்றி, தமிழகத்திலும் பவானியில் தண்ணீர் இருக்கும். எனினும், இங்குள்ள விவசாயிகள் ஒத்துழைப்பது சிரமம்தான். இதை அரசும் கண்டுகொள்வதில்லை. இந்த நிலை தொடர்ந்தால், தண்ணீருக்காக பெரிதும் பிரச்சினைகள் ஏற்படும்” என்றனர்.
கண்காணிக்கும் போலீஸார்
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக உளவுப் பிரிவு போலீஸார் கண்காணித்து வருகின்றனர். தமிழகப் பகுதியிலிருந்து வரும் போலீஸார், கேரளாவில் உள்ளவர்களிடம் விசாரிப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பவானியில் அணைகள் கட்டப்படுவதால் தமிழகத்துக்கு பாதிப்பு என்ற புகார் தெரிவித்து மத்திய அரசு மற்றும் கேரள, தமிழக அரசுகளுக்கு எதிராகப் போராடி வரும் தமிழக கட்சிகள், சில விவசாய அமைப்புகள் ஆகியவை, கேரள விவசாயிகளின் கோபத்தை அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே பவானி, சிறுவாணியில் அணை கட்ட கேரள அரசு முயன்றபோது, தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களுக்கு கேரள அட்டப்பாடி விவசாயிகள் துணை நின்றதால்தான் அணை கட்டும் முயற்சிகள் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.