மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரை வேதனையளிப்பதாக உள்ளது என்று தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் மன்னை மனோகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட்ட 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை, 7 மாதங்களுக்குப் பிறகு மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது வேதனை யளிக்கிறது.
ஊதிய உயர்வு 23.55 சதவீதமாக இருக்கும் என்று கூறுவது தவறு. தற்போது ரூ.15,750 வாங்கும் கடைநிலை ஊழியர்களின் ஊதியம் ரூ.18 ஆயிரமாக உயரும். இந்த உயர்வு 14.22 சதவீதம்தான். மேலும், இதில் தொழிலாளர்களுக்கான கூட்டுக் காப்பீட்டுத் திட்ட பிரீமியத் தொகைக்காக ரூ.1,500 பிடித்தம் செய்யவும் ஊதியக்குழு பரிந்துரைத்துள்ளது.
அதுமட்டுமின்றி, புதிய ஓய்வூதியத் திட்டத்துக்காக பிடித்தம் செய்யப்படும் தொகையும் ரூ.1,800-ஆக உயருகிறது. மொத்தத்தில், ஊதியத்தில் எந்த உயர்வும் கிடையாது. அதேசமயம், அதிகாரிகள் மற்றும் கேபினட் செயலாளர்களின் ஊதியம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
மேலும், நடைமுறையில் உள்ள 52 படிகள் ரத்து, பேரிடர், பண்டிகைக் கால முன்பணம் ரத்து, பதவி உயர்வுக்கு நிபந்தனைகள், பெண் ஊழியர்களின் குழந்தை பராமரிப்புக்கான விடுப்பில் 20 சதவீத ஊதியம் பிடித்தம் என, நடைமுறையில் இருந்த பல்வேறு சலுகைகளை ஊதியக்குழு பறித்துவிட்டது.
கடந்த 70 ஆண்டுகளில் இதுவே மிகவும் குறைவான ஊதிய உயர்வு மற்றும் மிகவும் மோசமான ஊதியக்குழு பரிந்துரைகளாகும். எனவே, தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்கம் இதை கடுமையாக எதிர்க்கிறது.