வழக்கறிஞர்களின் உரிமையைப் பறிக்கும் சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறவேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ் மாநிலக் குழு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ் மாநிலக் குழுத் தலைவரும், உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான என்.ஜி.ஆர்.பிரசாத் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தவறு செய்யும் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்கள் சட்டத்தின்படி பார் கவுன்சில் என்ற அமைப்பு இருக்கும்போது, உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றம் நேரடியாக நடவடிக்கை எடுக்கலாம் என்ற சட்டத் திருத்தம் ஜனநாயகத்துக்கு விரோதமானதாகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்கூட இல்லாத கருப்புச் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் கொண்டு வந்திருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல்.
இது வழக்கறிஞர் தொழிலின் சுதந்திரத்தையும், மாண்பையும் சீரழிக்கும் நிலையை உருவாக்கும். நீதிமன்ற செயல்பாட்டின் வெளிப் படைத்தன்மை, பொறுப்புடைமை களை வழக்கறிஞர்கள் கேள்வி கேட்க முடியாத நிலை ஏற்படும். தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும் ஆட்சேபணை இல்லை. ஆனால், தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை என்ற பெயரில் அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பறிப்பது கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன் சில் உரிமையைப் பாதுகாக்கவும், வழக்கறிஞர்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக அனைத்து வழக்கறிஞர் சங்கங்களும் ஒன்று பட்டு இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு என்.ஜி.ஆர்.பிரசாத் கூறினார்.
பேட்டியின்போது, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ் மாநிலக் குழு துணைத் தலைவர்கள் ஆர்.ராமமூர்த்தி, ஏ.சங்கரன், பொதுச் செயலாளர் என்.முத்து அமுதநாதன், பொருளாளர் எஸ்.சிவ குமார் ஆகியோர் உடனிருந்தனர்.