பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வட தமிழக மாவட்டங்களின் நீராதாரமான பாலாற்றில் ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காமல் வஞ்சிக்க வேண்டும் என முடிவெடுத்து அதற்கான திட்டங்களை ஆந்திர மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.
பாலாற்றின் குறுக்கே 33 கிலோ மீட்டர் தூரத்தில் 22 இடங்களில் விதிகளை மீறி ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டியுள்ளது. பல இடங்களில் அணையின் உயரத்தை அதிகரிக்கும் பணியில் முனைப்பு காட்டி வருகிறது.
தமிழக மக்களின் எதிர்ப்பை அலட்சியப்படுத்தி வாணியம்பாடியை அடுத்த புல்லூர் அருகே உள்ள தடுப்பணையின் உயரத்தை 5 அடியிலிருந்து 12 அடியாக ஆந்திர அரசு உயர்த்தி வருகிறது. இந்தத் தடுப்பு அணையிலிருந்து தண்ணீர் வெளியேற 2 கண்மாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல 10 கி.மீ. தொலைவில் கங்குந்தி என்ற இடத்தில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. பெகிலிரேவு பகுதியில் உள்ள அணை 7 அடி உயரத்திலும், கங்குந்தி அணை 25 அடி உயர்த்திலும் கட்டப்பட்டு வருகிறது.
வேலூரில் உள்ள பாலாறு பாதுகாப்புச் சங்கத்தினர் நேரில் சென்று ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை உறுதி செய்துள்ளனர். புல்லூர் அருகே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கனகநாச்சியம்மன் கோயிலை கைப்பற்றுவதற்காக தமிழக பக்தர்கள் வழிபடுவதைத் தடுக்க அங்கே ஆந்திர காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடித்து பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் தடுப்பணைகள் கட்டுவதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆந்திர அரசின் இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு போர்க்கால வேகத்தில் செயல்பட வேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.