தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு 2 மணி நேரம் விழிப் புணர்வு பயிற்சியுடன் அபராதமும் விதிக்கப்படும் என சாலை பாது காப்பு ஆணையரகம் அறிவித்துள் ளது.
இது தொடர்பாக சாலை பாது காப்பு ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், மாநில பாதுகாப்புக் குழு கூட்டம் கடந்த 6-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடந்தது. உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்புக் குழுவினர் பரிந்துரைகளை ஏற்று, வாகனத்தை அதிக வேகமாக இயக்குதல், சிவப்பு விளக்கைத் தாண்டுதல், குடி போதையில் வாக னம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும் போது கைபேசியை பயன் படுத்துதல், சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுதல், அதிக ஆட் களை ஏற்றுதல் போன்ற போக்கு வரத்து விதிமீறல்களுக்கு சம்பந்தப் பட்ட ஓட்டுநர்களின் உரிமங்களைத் தற்காலிக, நிரந்தர ரத்து செய்வது என கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது. உயிரிழப்பு ஏற்படுத்திய வாகன ஓட்டுநர்கள் தங்கள் உரிமங் களைத் திரும்பப் பெறும் முன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தால் நடத்தப்படும் பயிற்சி மையங்களில் 2 நாள் புத்தாக்கப் பயிற்சியை, அவரது சொந்த செலவில் மேற்கொண்டு உரிய சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளில் நடந்த சாலை விபத்துகளில் 40 சதவீத உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாக னத்தை ஓட்டியதால் ஏற்பட்ட வையாகும். எனவே, வாகன ஓட்டி களும் பின்னால் அமர்ந்து செல் பவரும் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகளை அருகில் உள்ள காவல் நிலையம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அழைத்துச் சென்று குறைந்த பட்சம் 2 மணி நேரம் விழிப்புணர்வு பயிற்சி அளிப்பதுடன், உரிய அபராதமும் வசூலிக்க வேண்டும்.
மூன்றாம் நபர் காப்பீட்டுச் சான்றிதழ் இல்லாமல் இயங்கும் வாகனங்களைச் சிறைபிடித்து உரிய சான்றிதழ் வழங்கிய பின் விடுவிக்கலாம்.
வாகனத்தை ஓட்டும்போது அனைவரும் அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.