புதுச்சேரி இடைத்தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தின் 3 தொகுதி களுக்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறு கின்றன.
தமிழகத்தில் கடந்த மே 16-ம் தேதி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடந்தது. இதில், அதிக அளவில் பணப் பதுக்கல், பணப் பட்டுவாடா காரணமாக அரவக் குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.எம்.சீனிவேல் எம்எல்ஏ கடந்த மே 25-ம் தேதி காலமானார். இதனால், திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளது.
இந்த 3 தொகுதிகளுக்கும் 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும். இதற்கான அறிவிப் புகளை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை. பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரியில் நடத்தப்பட உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் தற்போது ஈடுபட்டுள்ளது.
புதுச்சேரியில் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நாராயணசாமி, சட்டப்பேரவை உறுப்பினராக இல்லை. அவர் அடுத்த 6 மாதத்துக்குள் அந்த மாநிலத்தின் தொகுதி ஒன்றில் போட்டியிட்டு உறுப்பினராக வேண்டும். இதற்காக எம்எல்ஏ ஒருவர் தன் பதவியை ராஜினாமா செய்து, இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, அதில் நாராயணசாமி போட்டியிடுவார். எனவே, புதுச்சேரி தொகுதியுடன் சேர்த்து தமிழகத்தின் 3 தொகுதிகளுக்கும் 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.