சென்னை சிந்தாதிரிப்பேட்டை அய்யா முதலி தெருவில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்துக்கு கடந்த 28-ம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். 1-ம் தேதி மாலை வரை தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன. இந்து முன்னணி அலுவலகத்தின் 2 எண்களுக்கும் பேசிய அந்த நபர் அநாகரிகமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. “இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலனை ஒரு வாரத்துக்குள் கொலை செய்துவிடுவோம்” என்றும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பின் அலுவலக செயலாளர் பத்மராஜன் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்து முன்னணி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.