தமிழகம்

17 ஆண்டில் இல்லாத அளவாக வேலூரில் 111 டிகிரி வெயில்: வெயிலின் தாக்கம் 7 மாவட்டங்களில் தொடரும் என எச்சரிக்கை

செய்திப்பிரிவு

வேலூரில் ஏப்ரல் மாதத்தில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவாக நேற்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. வேலூர், சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் கோடைக் காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் கடந்த மார்ச் மாதமே எச்சரித்து இருந்தது. அதற்கு ஏற்றார்போல் தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

10 நகரங்களில் 100 டிகிரி

நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட அளவின்படி அதிகபட்சமாக வேலூரில் 111.38 டிகிரி ஃபாரன்ஹீட், மதுரை, பாளையங்கோட்டையில் தலா 106.16, திருச்சியில் 105.98, திருத்தணியில் 104, சென்னையில் 102.38, சேலத்தில் 102.2, தருமபுரியில் 100.76, நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டையில் தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது.

வேலூரில், ஏப்ரல் மாதத்தில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவாக நேற்று 111.38 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. கடந்த 17 ஆண்டுகளைப் பொருத்தவரை கடந்த 2016-ல் ஏப்ரல் 25-ம் தேதி அதிகபட்ச வெப்பநிலையாக 110.66 டிகிரி பதிவாகியிருந்தது. கடந்த 2000-ல் பதிவாகியிருந்த 111.92 டிகிரி வெப்ப அளவே வேலூரில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக இருந்து வருகிறது.

7 மாவட்டங்களில் தொடரும்

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “அடுத்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரை தமிழகத்தின் உள்மாவட்டங்களான வேலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், மதுரை, திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் தொடரும். அந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இயல்பை விட வெயில் அதிகரித்து 104 முதல் 111 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்” என்றார்.

          
SCROLL FOR NEXT