சென்னை சேப்பாக்கம் வேளாண்மைத் துறை ஆணையர் அலுவலகத்தின் தரை கீழ்த்தளத்தில் மின்இணைப்பு பெட்டிகள், மின்சார வயர்கள், ஜெனரேட்டர் இருக்கும் இடத்தில் மழைநீர் தேங்கியிருப்பதால், மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
வேளாண்மைத் துறை ஆணையர் அலுவலகம்
சென்னை சேப்பாக்கத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு எதிரே வேளாண்மைத் துறை ஆணையர் அலுவலகத்தின் பலஅடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் தரைகீழ்தளத்தில் (பேஸ்மெண்ட்) இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதுடன், பயனற்ற வாகனங்களும் தூசி படிந்த நிலையில் கிடக்கின்றன. அங்கே வேளாண்மை பொறியியல் பணிகள், வேளாண்மைத் துறை விரிவாக்கப் பிரிவு, வேளாண்மைத் துறை அச்சகம் ஆகிய அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதில், 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
மின் இணைப்புப் பெட்டிகள் அருகில் மழைநீர் தேக்கம்
சமீபத்தில் பலத்த மழை பெய்த போது வேளாண்மை விரிவாக்கப் பிரிவு அலுவலகத்துக்குள் தண்ணீர் வந்து, மின்கசிவு ஏற்பட்டதாக அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தெரிவித்தனர். அலுவலகத்துக்கு வெளியே அரைஅடி உயரத்துக்கு மழைநீர் தேங்கியது. பொதுப்பணித் துறை ஊழியர்கள் மழைநீரை வெளியேற்றினர். அதன்பிறகும் அங்குள்ள மின் இணைப்புப் பெட்டிகள், பெரிய மின்சார கேபிள்கள், ஜெனரேட்டர் உள்ள இடத்தில் இன்னமும் மழைநீர் தேங்கியிருப்பதாக கூறுகின்றனர். இதுகுறித்து அரசு அலுவலர் முன்னேற்றக் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஆர்.சவுந்தர்ராஜன் கூறிய தாவது:-
உயிருக்குப் பயந்து வேலை செய்கிறோம்
மழைநீர் தேங்கியுள்ளதால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. நாற்றத்தில், உயிருக்குப் பயந்து கொண்டுதான் வேலை பார்க்க வேண்டியுள்ளது. கொசுக்கடியால் கை, கால் வீக்கம், மலேரியா, வைரஸ் காய்ச்சலால் அவதிப்படுகிறோம். இதுகுறித்து வேளாண்மைத் துறை இயக்குநரிடம் மனு கொடுத்தோம். அதன்பிறகும் வேதனைக்கு விடிவு பிறக்கவில்லை என்றார்.
அங்குள்ள அலுவலகத்தில் பணி யாற்றும் பெயர் சொல்ல விரும்பாத பெண் ஊழியர் ஒருவர் கூறியதாவது:-
பெரும் விபத்து ஏற்படும் முன்பு நடவடிக்கை
எங்கள் அலுவலகம் ஈக்காட்டுத் தாங்கலில் இருந்தது. இங்கு வந்ததில் இருந்தே பெரிதும் சிரமப்படுகிறோம். வெயில்காலம் என்றால் அலுவலகத்துக்குள் தூசி பறக்கிறது. மழைக்காலம் என்றால் மழைநீர் புகுந்து மின்கசிவு வரை நிலைமை மோசமாகிறது. கார் பார்க்கிங் பகுதியாக இருப்பதால் இங்கு அரசு அலுவலகம் செயல்படுவதற்கான சூழல் அறவே இல்லை. இப்படிப்பட்ட பணிச்சூழலில் நிம்மதியாக பணியாற்ற முடியவில்லை. பெரும் விபத்து நடக்கும் முன்பு எங்கள் அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று உயர் அதிகாரிகளை தொடர்ந்து கேட்டு வருகிறோம் என்றார்.
வருங்காலத்தில் தீர்வு
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த கட்டிடம் கட்டும்போது பேஸ்மெண்ட்டில் மழைநீர் தேங்கினால், அதை அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. மற்ற கட்டிடங்களில் இருப்பது போன்ற "கலெக்சன் வெல்" இருந்தால் பம்பிங் செய்து மழைநீரை வெளியேற்றிவிடலாம். இங்கு ஆட்களைக் கொண்டுதான் மழைநீரை வெளியேற்ற வேண்டியுள்ளது. வருங்காலத்தில் கலெக்சன் வெல் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றார்.