‘‘எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் 25 ஆண்டுகளாக திமுகவுக்காக முழங்கிக் கொண்டிருக்கிறேன்’’ என்று ‘கலைஞர்’விருது பெற்ற நடிகர் குமரிமுத்து கூறினார்.
சென்னையில் நேற்று முன்தினம் நடந்த திமுக முப்பெரும் விழாவில் நடிகர் குமரிமுத்துவுக்கு ‘கலைஞர்’ விருது வழங்கப்பட்டது. விருது குறித்து ‘தி இந்து’விடம் குமரிமுத்து கூறியதாவது:
1954-ல் எனது 16 வயதில் கலைத்துறைக்கு வந்தேன். தொடக்கத்தில் ஆறாண்டுகள் எம்.ஆர்.ராதா அண்ணனின் நாடக கம்பெனியில் இருந்தேன். 1968-ல் நாகேஷ் அண்ணனுடன் நடித்த ‘பொய் சொல்லாதே’ படம்தான் எனது முதல் படம். அப்ப முகமெல்லாம் டொக்கு விழுந்து ஆக்ஸிடென்ட் ஆன அம்பாசிடர் கார் மாதிரி இருப்பேன். அதுக்காக இன்னைக்கி அழகுன்னு சொல்லல. இப்ப சினிமா வசதிகள் வந்துட்டதால கொஞ்சம் மோல்டாகி, அப்ப இருந்ததைவிட கொஞ்சம் அழகா இருக்கேன்னு சொல்றேன்.
எனது சினிமா குரு டைரக்டர் மகேந்திரன் சார்தான். அவர் இயக்கிய எட்டுப் படங்களில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அதற்கு பிறகு பாக்யராஜ் ஐயா ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் எனக்கு புதுவாழ்வு கொடுத்தார்.அண்ணாவின் பேச்சாற்றலைப் பார்த்து திமுக அனுதாபி ஆனேன். 21 வயதிலிருந்து திமுக அனுதாபியாக இருந்தாலும் கட்சிக்கும் எனக்குமான நேரடித் தொடர்பு 1989-ல் இருந்துதான்.
அப்போது நடந்த தேர்தல் பிரச்சாரத்துக்கு என்னைக் கேட்காமலேயே என் பெயரை அறிவித்தார் கலைஞர். அப்போதிருந்து 25 ஆண்டுகளாக எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் திமுகவுக்காக முழங்கிக் கொண்டிருக்கிறேன். 76 வயதில் எனக்கு கலைஞர் பெயரில் விருது என்றபோது சிறுவனைப்போல துள்ளிக் குதித்தேன். கலைஞரின் இலக்கியத்தில், தமிழில் மயங்கியவன் நான். அரசியலாக பார்க்காமல் தனி மனிதராக பார்த்தால் அவரைப் போல் ஒரு மாமேதையை இனி பார்க்க முடியாது. அவர் பெயரில் விருது கிடைத்ததை பிறவிப் பயனாக கருதுகிறேன்.
இன்றைக்கு எத்தனையோ நடிகர்கள் அரசியலில் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இன்றைக்கு ஒரு இடம் நாளைக்கு ஒரு இடம் என மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.
அது அவர்களின் சுபாவம். ஆனால், குமரிமுத்து அப்படி இல்லை. என்னைப் பொறுத்தவரை ஒருவரை வாழ்க என்று சொல்லிவிட்டு, அதன் பிறகு எத்தனை மனக்கசப்புகள் வந்தாலும் அவரை ஒழிக என்று சொல்ல மாட்டேன். அப்படியொரு சூழல் வந்தால் நான் உயிரோடு இருக்க மாட்டேன்.
இவ்வாறு குமரிமுத்து கூறினார்.