பொதுமக்களை கவரும் வகையில் வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் பாரம்பரிய இசை மற்றும் உணவு திருவிழா நடக்கிறது.
சென்னையில் தற்போது விமான நிலையம் கோயம்பேடு, பரங்கிமலை ஆலந்தூர் கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்ற போக்குவரத்து வசதிகளைவிட கட்டணம் அதிகமாக இருப்பதால் மக்கள் மெட்ரோ ரயிலில் செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். இருப்பினும், விடுமுறை நாட்கள், தீபாவளி பண்டிகை போன்ற நாட்களில் மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மெட்ரோ ரயில் பயணம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகி றோம்.
தினமும் சுமார் 12 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, கடந்த பொங்கல் பண்டிகையின்போது 4 நாட்களில் சுமார் ஒரு லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
எனவே, மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய மக்களை ஊக்குவிக்கும் வகையில் வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையில் பாரம்பரிய இசை மற்றும் உணவு திருவிழா நடக்கிறது. பல்வேறு இசை வித்தகர்கள் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர்.
இதேபோல், உணவுத் திருவிழாவில் தமிழக பாரம்பரிய உணவு வகைகள், கைவினைப் பொருட்கள் இடம் பெறும். இந்த திருவிழாவில் பங்கேற்க அனுமதி இலவசம்’’ என்றார்.