தமிழகம்

கோவையில் பதற்றம் தணியாத பெரியதடாகம் பாரதி நகர்: பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் தலித் அமைப்புகள்

செய்திப்பிரிவு

தனியாக விநாயகர் சிலை வைத்து கொண்டாடியதால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக பெரியதடாகம் பாரதி நகரில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

கோவையிலிருந்து ஆனைகட்டி செல்லும் வழியில் 18 கிமீ தூரத்தில் உள்ளது பெரியதடாகம். செங்கல்சூளைகள் நிறைந்த இக்கிராமத்தின் நுழைவுப் பகுதியில் பாரதி நகர் உள்ளது. 25 வீடுகளே உள்ள இந்த குடியிருப்புப் பகுதியில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 82 பேர் வசித்து வருகின்றனர்.

கடந்த விநாயகர் சதுர்த்தியன்று இங்குள்ளவர்கள் தனியே விநாயகர் சிலை வைத்து, ஜமாப் அடித்து விழா கொண்டாடியதாகவும், உயர் ஜாதியினர் ஜமாப் அடிக்க அழைத்ததில் வரமறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது. அதற்காக, வெளியூர் நபர்களை அழைத்து ஜமாப் அடித்து விழா முடித்தவர்கள் சிலர், அருந்ததியர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் கடந்த வாரத்தில் இரண்டு முறை கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பாரதி நகர் மக்கள்.

இந்த நிலையில் தற்போது 17 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. போலீஸ் இன்னமும் ஒருவரைக் கூட கைது செய்யாத சூழலில் வெளியில் எங்கும் செல்லாமல் ஊருக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். தொடர்ந்து அவர்களை பல்வேறு தலித் அமைப்பினர், மனித உரிமை அமைப்பினர் சந்தித்து நடந்த விவரங்களை கேட்டுச் செல்கின்றனர்.

இந்த பகுதியை கண்காணிக்க போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டு தொடர்ந்து 2 போலீஸார் கண்காணித்து வருகின்றனர். மேலும், ரோந்து வாகனமும் சுற்றி வருகிறது.

நேற்று இப்பகுதி மக்களை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சந்தித்து விவரம் கேட்டறிந்தனர். அப்போது மக்கள் கூறியதாவது:

நாங்கள் செங்கல் சூளைகளுக்கு வேலைக்கு செல்கிறவர்கள். வெளியூர் வேலைக்குச் செல்லும் இளைஞர்களும் உள்ளனர்.

செங்கல்சூளைகள் உயர் ஜாதியினருக்கு சொந்தமானது. இந்த பிரச்சினையால் எங்களை வேலைக்கு அழைக்கவும் இல்லை; நாங்கள் போகவும் இல்லை. நகர் பகுதிக்குச் சென்று வேலை செய்யும் இளைஞர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் பேருந்திலோ, இருசக்கர வாகனத்திலோ செல்லும்போது தாக்கப்பட வாய்ப்புள்ளதாக அச்சம் உள்ளது. அச்சப்பட்டு 10 நாட்களாக யாரும் வேலைக்குச் செல்லாததால் அவர்களுக்கு இருந்த வேலையும் பறிபோய்விட்டது.

எங்கள் மீதும் சிலர் தந்த புகார் அடிப்படையில் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து பயமுறுத்துகின்றனர். சாலையில் நாங்கள் ஓரமாகக் கூட நிற்கமுடியாது. குழந்தைகளை வெளியே விடுவதில்லை. சாலை ஓரத்தில் கூட யாரும் நிற்க வேண்டாம் என்று எச்சரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த போலீஸார் கூறும்போது, ‘நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்த சூழ்நிலை இப்போது இல்லை’ என்றனர்.

SCROLL FOR NEXT