கட்டி முடித்தும் திறக்கப்படாத போரூர் மேம்பாலத்தைப் பொது மக்கள் தாங்களாகவே திறந்து கொண்டு போக்குவரத்தை தொடங் கினர். 2 மணி நேரம் வாகனங்கள் சென்ற நிலையில், போலீஸார் வந்து மீண்டும் பாலத்தை மூடினர். பாலத்தை உடனே திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை வடபழனி, குன் றத்தூர், பூந்தமல்லி, கிண்டி ஆகிய முக்கியப் பகுதிகளை இணைக்கும் போரூர் ரவுண்டானா வழியாக தினமும் லட்சக்கணக்கான வாக னங்கள் செல்கின்றன. இதனால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற் படுகிறது. இதை தவிர்க்கும் வகை யில், இருபுறமும் தலா 7.5 மீட்டரில் சர்வீஸ் சாலையுடன், 480 மீட்டர் நீளம், 37.2 மீட்டர் அகலத்துக்கு ரூ.34.72 கோடியில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப் பட்டது. சென்னைப் பெருநகர நெடுஞ்சாலைத் துறை சார்பில் கடந்த 2010 பிப்ரவரியில் பாலம் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது.
செம்பரம்பாக்கத்தில் இருந்து தென் சென்னைக்கு இந்த வழி யாகச் செல்லும் பெரிய குடிநீர் குழாய்களை, வேறு வழிக்கு மாற்ற ரூ.5.5 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், மேம்பால கட்டுமானப் பணி முடங்கியது. இதனால் காலை, மாலை நேரங் களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவந்தது. சாலையில் ஏற்பட்ட மேடு, பள்ளங்களால் வாக னங்கள் ஊர்ந்து செல்ல வேண்டியிருந்தது.
இதற்கிடையில், அப்பகுதியை சேர்ந்த குடியிருப்போர் சங்கங்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தியதை அடுத்து, கடந்த 2015 ஜூலை மாதம் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. பின்னர், படிப்படியாக அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்காக போரூர் மேம்பாலம் காத்திருக்கிறது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. இதனால் போரூர் சிக்னலிலும், புதிய மேம்பாலம் அருகிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 2 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. திறப்பு விழா இன்னும் நடக்காததால் பாலத்தின் மேலே வாகனங்கள் சென்றுவிடாதபடி போலீஸார் தடுப்புகளை அமைத்திருந்தனர். கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்ததால் ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள், அந்த தடுப்புகளை அகற்றி, பாலத்தை திறந்தனர்.
பாலத்தில் கிண்டி நோக்கிச் செல்லும் பாதை திறக்கப்பட்டது. அதில் வாகனங்கள் செல்லத் தொடங்கின. இதையடுத்து, போக்குவரத்து நெரிசல் சிறிது நேரத்தில் சரியானது. இரவு 7 மணி அளவில் திறக்கப்பட்ட இந்த பாலத்தில் 9 மணி வரை வாகனங்கள் சென்றன.
இதற்கிடையில், பொதுமக்கள் தாங்களாகவே பாலத்தை திறந்து கொண்டது குறித்த தகவல் கிடைத்து, போலீஸார் விரைந்து வந்தனர். அவசர அவசரமாக தடுப்புகளை அமைத்து பாலத்தை மீண்டும் மூடினர். அதன்பிறகு பாலத்தில் வாகனங்கள் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால், மீண்டும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
விரைவில் திறக்கப்படுமா?
வாகன ஓட்டிகள் கூறியபோது, ‘‘இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலால் கடந்த 7 ஆண்டுகளாக அவதிப்படுகிறோம். எங்கள் பல ஆண்டுக் கனவான பாலம், பல கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டும், திறக்காமல் தாமதம் செய்கின்றனர். அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக போரூர் பாலத்தை திறக்க வேண்டும்’’ என்றனர்.