சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் இணைப்புப் பெட்டி தொழிற் சாலையில் (ஐசிஎப்) முதல் முறையாக நீலகிரி மலை சுற்றுலா ரயிலுக்கு பல்வேறு சிறப்பு வசதியுடன் பிரத்யேகப் பெட்டி விரைவில் தயாரிக்கப்படவுள்ளது.
மலைப்பிரதேச சுற்றுலாவுக்கு ஐஆர்சிடிசி சார்பில் இயக்கப்படும் ரயில்களுக்கு கண்ணாடி ரயில் பெட்டிகளை தயாரிக்க பெரம்பூர் ஐசிஎப்-க்கு ஏற்கெனவே, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ரயில் பெட்டியின் மேற்கூரையில் கண்ணாடி, நவீன பொழுதுபோக்கு அம்சங்கள், வை-ஃபை வசதி உள்ளிட்டவை இருக்கும்.
இந்நிலையில், நீலகிரி மலை சுற்றுலா ரயிலுக்கு பல்வேறு சிறப்பு வசதிகளுடன் பிரத்யேகப் பெட்டியை சுமார் ரூ.3 கோடி செலவில் தயாரிக்க ஐசிஎப்-க்கு ரயில்வே வாரியம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஐசிஎப் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது: ஊட்டி மலை ரயில் இந்தியாவில் இருக்கும் மிகச் சிறப் பான 4 மலை ரயில்களில் ஒன்றாகும். 109 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நீலகிரி மலை ரயில், இன்றும் தொடர்ந்து சிறப்பானப் பயணத்தைத் தந்து கொண்டிருக்கிறது. இந்த ரயில் பயணிக்கும் 45.8 கிலோ மீட்டர் தூரத்துக்குள் 16 சுரங்கங்களையும், 250 பாலங்களையும் கடக்கிறது. இந்தியாவிலேயே பல் சக்கரம் கொண்ட ஒரே ரயில் பாதை இங்கு மட்டும்தான் இருக்கிறது.
இந்நிலையில், நீலகிரி மலை சுற்றுலா ரயிலில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான புதிய ரயில் பெட்டியை ஐசிஎப்-ல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பெட்டி உள்பகுதி மரத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.
சுழலும் சொகுசு இருக்கைகள், பாதுகாப்பு குறிப்புகளை தெரிவிப் பதற்காக எல்இடி திரைகள், வை-ஃபை வசதி, தேனீர், காபி வழங்கும் தானியங்கி இயந்திரங் கள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் இதில் இடம் பெறும். ஒரு பெட்டியை தயாரிக்க சுமார் ரூ.3 கோடி வரை செலவாகும். இயற்கை அழகை ரசிக்கும் வகையில் இந்த ரயில் பெட்டி அமையும். இந்தப் புதிய ரயில் பெட்டியின் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப் பட்டுள்ளது. எனவே, நடப்பு நிதியாண்டுக்குள் இந்த சுற்றுலா ரயில் பெட்டி தயாரிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.