தமிழகம்

என்எல்சி நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டது

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்) ‘என்எல்சி இந்தியா லிமிடெட்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு என்எல்சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்எல்சி அதிகாரி ஒருவர் கூறியது: நெய்வேலியில் கிடைக்கும் பழுப்பு நிலக்கரி மட்டுமின்றி, அதையும் தாண்டி தற்போது காற்றாலை, சூரிய ஒளி மற்றும் நிலக்கரி மூலம் நாட்டின் பல பகுதிகளில் மின் உற்பத்தித் திட்டங்களை என்எல்சி நிறுவனம் தொடங்கி செயல்படுத்தி வருகிறது. அந்தப் பகுதிகளில் உள்ள நிறுனங்களில் எல்லாம் நெய்வேலி என்ற பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே, நாடு முழுவதும் உள்ள ஒரு பெரும் பொதுத்துறை நிறுவனத்தை எளிதில் மற்றவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் என்எல்சி நிறுவனத்தின் பெயரானது, ‘என்எல்சி இந்தியா லிமிடெட்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் பல மாதங்களாக நடை பெற்று வந்த நிலையில், இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்களின் ஒப்புதல் பெற்றும், பங்குச்சந் தைக்கு தெரியப்படுத்தியும், நிலக்கரி மற்றும் கன ரகத் தொழில் துறை அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்றும் புதிய பெயர் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

கி.வீரமணி எதிர்ப்பு

விருத்தாசலத்தில் நேற்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி செய்தியாளர்களிடம் கூறியது:

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ‘நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்’ என்று இருந்த பெயரை மாற்ற அவசியம் என்ன? ‘என்எல்சி இந்தியா’ என்ற பெயரை உடனடியாக மாற்ற வேண்டும். இல்லையெனில் வரும் 22-ம் தேதி நெய்வேலி என்எல்சி தலைமை அலுவலகம் முன்பு திராவிடர் கழகம் மற்றும் ஒத்த கருத்துள்ளவர்களின் ஆதரவோடு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

SCROLL FOR NEXT