தமிழகம்

சென்னையில் கடந்த ஆண்டைவிட போகி பண்டிகையின்போது காற்று மாசு 7% குறைந்தது: மாசு கட்டுப்பாடு வாரியம் தகவல்

செய்திப்பிரிவு

சென்னையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் போகிப் பண்டிகையின்போது ஏற்படும் காற்று மாசு 7 சதவீதம் குறைந்திருப்பதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையில் போகி தினத்தன்று பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்களை எரித்து, காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மாசு கட்டுப்பாடு வாரியம் மேற்கொண்டுள்ளது.

போகியை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போகிக்கு முன்பும், போகி அன்றும் காற்றுத் தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு முடிவுடன் இந்த ஆய்வு முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணாநகர், கோடம்பாக்கம், அடையாறு ஆகிய 8 மண்டலங்களில், சுவாசிக்கும் காற்றில் உள்ள நுண்துகள்கள் அளவு இந்த ஆண்டு போகியின்போது குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. 7 இடங்களில் மாசு அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, சென்னையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 7 சதவீதம் காற்று மாசு குறைந்துள்ளது.

இயல்பாக ஒரு கன மீட்டர் காற்றில் 100 மைக்ரோகிராம் நுண் துகள்கள் இருப்பது அனுமதிக்கப்பட்ட அளவாகும். இந்த போகியில், 15 இடங்களில் எடுக்கப்பட்ட காற்றுத் தர ஆய்வில், குறைந்தபட்சமாக 70 மைக்ரோகிராம் மாசும், அதிகபட்சமாக 306 மைக்ரோகிராம் மாசும் பதிவாகியுள்ளது. கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகிய நச்சுப் பொருட்கள், அனுமதிக்கப்பட்ட அளவிலேயே காற்றில் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT