திருநெல்வேலி மாவட்டத்தில் 13 சிலைகள் திருடப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட தீனதயாள், திருவில்லித்தூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், பழவூரில் மிகவும் பழமையான நாறும் பூநாதர் கோயில் உள்ளது. கடந்த 18.6.2005-ல் இக்கோயிலின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்த கும்பல் அங்கு இருந்த நடராஜர், சிவகாமி, காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட 13 சிலைகளை திருடிச் சென்றது.
இது தொடர்பாக, பழவூர் போலீஸார் விசாரணை நடத்தி அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சக்திமோகன், பாலாஜி (எ) பாலசந்தர், சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமார் (எ) ஆறுமுகம் ஆகியோர் சிலைகளை திருடிய தாகவும், மதுரையைச் சேர்ந்த முருகன் (எ) சவுதி முருகன், ஷாஜகான், அருணாச்சலம், காரைக்குடியைச் சேர்ந்த தினகரன் ஆகியோர், சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த தீனதயாள் என்பவரிடம் ரூ.9 லட்சத்துக்கு சிலைகளை விற்றதாகவும் வழக்கு பதிவு செய்தனர்.
திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சிலை திருட்டு தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் விசாரணைக்காக, பலத்த பாதுகாப்புடன் தீனதயாள் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி வசந்தி, விசாரணையை செப்டம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.