புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 60 குழந்தைகளுக்கு ரே ஆஃப் லைட் பவுண்டேஷன் சார்பில் இலவச சிகிச்சை அளிக்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
சென்னையில் 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் ‘ரே ஆஃப் லைட் பவுண்டேஷன்’ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறது.
கடந்த 15 ஆண்டுகளில் நன்கொடையாளர்கள் மூலமாக திரட்டப்பட்ட நிதியை கொண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 124 குழந்தைகளுக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 60 குழந்தைகளுக்கு நடப்பு ஆண்டில் இலவச சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டது. அதன் படி, ‘குழந்தைகள் புற்றுநோய் தீர்வு-2017’ என்ற பெயரில் சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடக்க நிகழ்ச்சி காஞ்சி காமகோடி குழந் தைகள் அறக்கட்டளை மருத்துவ மனையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் முரளி விஜய் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக ரே ஆஃப் லைட் பவுண்டேஷன் நிறுவனர் டாக்டர் பிரியா ராமச்சந்திரன் கூறும்போது, “புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தை களுக்கு எங்களுடைய அமைப்பின் மூலம் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்” என்றார்.
நிகழ்ச்சியில், தொழிலதிபரும், காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையின் தலைவருமான ஏ.சி.முத்தையா, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் முகமது ரேலா, சன்மார் குழுமத்தின் தலைவரும் காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக் கட்டளையின் அறங்காவலருமான என்.சங்கர், டாக்டர் ஜூலியஸ் சேவியர் ஸ்காட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.