திட்டமிட்டபடி வரும் ஜூலை 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்துவோம் என தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யு) பொதுச் செயலாளர் என்.கண்ணையா அறிவித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதிய கமிஷனில் உள்ள முரண்பாடுகளை போக்க வேண் டும். அடிப்படை ஊதியத்தை ரூ.26 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தன.
இதையடுத்து, ரயில்வே தொழிற் சங்கங்கள் சார்பில் தனித் தனியாக அடையாள ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, எஸ்ஆர்எம்யு சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஒட்டுமொத்தமாக 23.55 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம், படிகள் உட்பட மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு ஜனவரி 1-ல் இருந்து முன் தேதியிட்டு வழங்கப்படவுள்ளது.
ஆனால், அடிப்படை சம்பளம் ரூ.26 ஆயிரமாக உயர்த்தாதது, புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்கா தது ஆகியவற்றை கண்டித்து எஸ்ஆர்எம்யு சார்பில் தமிழகம் முழுவதும் 250 இடங்களில் கண் டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட் டன. இதில், சென்னையில் சென்ட் ரல், பேசின்பிரிட்ஜ், எழும்பூர், பெரம் பூர் உட்பட 65 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டன.
இது தொடர்பாக எஸ்ஆர்எம்யு பொதுச் செயலாளர் என்.கண்ணையா கூறும்போது, ‘‘மத் திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதிய கமிஷனில் எங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. குறிப்பாக குறைந்தபட்ச சம்பளம் ரூ.26 ஆயிரமாக உயர்த்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் ஏற்கவில்லை” என்றார்.