'மெட்ராஸ் கேனைன் கிளப்’ சார்பில் 3 நாள் நாய்கள் கண்காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் 52 இனங்களைச் சேர்ந்த 680 நாய்கள் இதில் பங்கேற்றன. நாய்களின் இனங்களை வைத்து 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தினமும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
மூன்றாம் நாளான ஞாயிற்றுக் கிழமையும் போட்டிகள் நடந்தன. உடல் கட்டமைப்பு, அழகு, நடை மற்றும் ஓட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் நாய்களுக்கு மதிப்பெண்கள் போடப்பட்டது. சிறந்த நாய்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ரோசய்யாவை, ‘தி இந்து’ குழுமத்தின் சேர்மன் என்.ராம் வரவேற்றார்.
ஒவ்வொரு பிரிவிலும் ஒரு நாய் வீதம் 10 நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவற்றில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன்களான விஜய்பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் வளர்த்த பூடுல், சைபீரியன் ஹஸ்கி, ஐரிஷ் செட்டர் ஆகிய 3 இனத்தைச் சேர்ந்த 4 வெளிநாட்டு நாய்கள் பரிசுகளை வென்றன. பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ்களை விஜயகாந்தின் மகன்கள் பெற்றுக் கொண்டனர்.
சிறந்த நாய் மற்றும் ஒட்டுமொத்த பிரிவில் சிறந்த நாய் என இரண்டு பரிசுகளை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 2 வயதான . ‘மிஸ்டர் பிக்’ என்ற பூடுல் இன நாய் வென்றது. விழாவுக்கு மெட்ராஸ் கேனைன் கிளப் தலைவர் சி.வி.சுதர்சன் தலைமை தாங்கினார். செயலாளர் கே.பி.ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.