பெரியகுளம் புறவழிச்சாலை பணியை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைத் துறை, தனது கட்டுப்பாட்டில் உள்ள திண்டுக்கல் - தேனி மாவட்ட நெடுஞ்சாலையில் 190 கி.மீ. தூரத்துக்கு நான்கு வழிச் சாலை அமைத்துக்கொள்ள மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு அனுமதி வழங்கியது.
இதனையடுத்து கடந்த 2011-ம் ஆண்டு மாநில நெடுஞ்சாலைத் துறையினரால் புதிய சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது. வக்கம்பட்டி வழியாக செம்பட்டி, வத்தலகுண்டு, தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய நகர் பகுதிகளை தவிர்த்து, மற்ற இடங்களில் நிலத்தை கையகப்படுத்தி சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
திண்டுக்கல் புறநகரில் இருந்து வத்தலகுண்டு, தேவதானப்பட்டி வரையிலும், சின்னமனூரில் இருந்து உத்தமபாளையம், கம்பம் வரையிலும் நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடைந்துவிட்டன. ஆனால், தேவதானப்பட்டி புறநகரில் இருந்து பணிகள் தொடங்கியபோது திடீரென பணிகள் நிறுத்தப்பட்டன.
பின்னர், தேவதானப்பட்டி புறநகரில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரம் இடைவெளிவிட்டு பெரியகுளம் - வடுகபட்டி சாலைக்கு இடையே செல்லும் பகுதியில் தற்போது பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து பெரியகுளத்தைச் சேர்ந்த விவசாயி முருகவேல் கூறியதாவது:
நான்கு வழிச்சாலை திட்டத்துக்காக காலிமனைகள் மட்டுமல்லாமல் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், தோட்டங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்ட போதிலும், இந்த சாலை பணியால் போக்குவரத்து வசதி மேம்படும் என்பதால் நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம். இந்த சாலை பணியை தாமதிக்காமல் விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாக மாநில நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இந்த சாலை பணிக்காக பெரியகுளம் அருகே எண்டப்புளிப்பட்டி பகுதியில் சில குடியிருப்புகளை இடிக்க வேண்டிய நிலை உள்ளது. குடியிருப்பு வாசிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், அப்பகுதியில் பணிகள் நடைபெறவில்லை. மற்ற இடங்களில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது என்றார்.